வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இந்தியாவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவமானப்படுத்துவது வெட்கப்படவேண்டிய விஷயம் என இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், மைசூரில் நாகாலாந்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டது குறித்து சுனில் சேத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில், நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மைசூருவில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க முற்பட்டபோது, அந்தக் கடையில் பணியாற்றிய ஊழியர் இவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்துள்ளார்.இரண்டு மாணவர்களையும் சீனர்கள் என்று கூறியதோடு,இந்தியர்கள் என நிரூபிக்க ஆதார் அட்டையைக் காண்பிக்கச் சொல்லியுள்ளார்.ஆனால் அவர்களிடம் ஆதார் அட்டை இல்லாததால் அவர்களைப் பொருட்கள் வாங்க அனுமதிக்கவில்லை. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத அந்த மாணவர்களின் நிலை குறித்த செய்திகள் பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, "இது இழிவான செயல்.இதற்கு நீங்கள் வெட்கப்படவேண்டும்.ஒருவேளை உங்கள் பகுதியில் கரோனா வைரஸ் உருவாகியிருந்து,நீங்கள் வடகிழக்கு இந்தியா வரும்போது இங்குள்ளவர்கள் உங்களை இழிவாக நடத்தினால் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்? இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்வதுதான் அனைவருக்கும் நல்லது. அவர்கள் இப்போதுதான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு மற்றவர்களைப் போல நிறையச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இருப்பினும் மகிழ்ச்சியாக இருக்க முனைகிறார்கள்.அந்தச் சிறுவர்களில் ஒரு சிலர் சமூகப் பணிகளையும் செய்கிறார்கள்.இந்த நிகழ்வு வெட்கக்கேடானது என்று நான் நினைக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.