Skip to main content

உலகின் நம்பர் 2... அசத்தும் இந்திய கால்பந்து வீரர்... மெஸ்ஸியை விட பெஸ்ட்...

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் ஆதரவில் மற்ற விளையாட்டிற்கு 100-ல் 5% அளவிலாவது இருக்கிறதா என்றால் இல்லை என்ற உண்மையே வெளிப்படும்.  வணிகம் முதல் பல காரணிகள் இந்தியாவில் கிரிக்கெட்டை விளையாட்டு என்பதை தாண்டி ஒரு எல்லையற்ற இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. அதேசமயம் அந்தக் காரணிகளாலே மற்ற விளையாட்டுகளும், மற்ற விளையாட்டு விளையாடும் வீரர்களும் அறியப்படாத அளவிற்கு மறைக்கப்பட்டு விட்டது. 

 

sunil

 

சர்வதேச அணிக்கோ அல்லது ஐ.பி.எல். அணிக்கோ கிரிக்கெட்டில் புதிதாக வரும் வீரரைப் பற்றி அறிய முற்படும் அளவிற்கு, டென்னிஸ், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளில் புதிதாக வரும் ஒருவரைப் பற்றி அறிவதற்கு முற்படுவதில்லை. அவர் உலக சாதனை புரிந்த பிறகுதான் அவரை பற்றி கொஞ்சமாவது அறிந்துகொள்வதற்கு முற்படுகிறோம். இது நமது அமைப்பில் யதார்த்தம் என்றளவில் ஆகிவிட்டது. அப்படிப்பட்ட உலக சாதனையாளர், இந்திய அணியின் கால்பந்து ஹீரோ தான் சுனில் சேத்ரி. 
 

தற்போது விளையாடி வரும் வீரர்களில் சர்வதேச அரங்கில் அதிக கோல் போட்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் சுனில் சேத்ரி. தற்போது சர்வதேச கோல்கள் கணக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளார் சுனில் சேத்ரி. ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை விட இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சிறந்த கோல் விகிதத்தை கொண்டுள்ளார். இப்படிப்பட்ட ஒரு உலக சாதனையாளர் பிரபலப்படாமல் இருப்பது வேதனைக்குறிய ஒன்று. 
 

ஜனவரி மாதம் நடைபெற்ற ஏ.எப்.சி. ஆசியக்கோப்பை போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி 2 கோல்கள் அடித்து மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்தார். 2005-ஆம் ஆண்டு முதல் இதுவரை 107 போட்டிகளில் 67 கோல்கள் அடித்து 0.63 கோல் வீதத்தை கொண்டுள்ளார். முதல் இடத்தில் உள்ள நட்சத்திர வீரர் ரொனால்டோ 0.55 கோல் வீதத்தை கொண்டுள்ளார். மெஸ்ஸி 0.51 கோல் வீதத்தை கொண்டுள்ளார். 
 

sunil

 

2018 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் இன்டர்கான்டினேன்டல் கோப்பை தொடரில் இந்திய கால்பந்து அணியை உற்சாகப்படுத்த சமூக வலைதளத்தில் சுனில் சேத்ரி வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் தங்களுக்கு பெரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு விராத் கோலி, சச்சின், அபிசேக் பச்சன் போன்ற பிரபலங்கள் மற்றும் 60,000-க்கும் மேற்பட்டோர்  ரீட்வீட் செய்து ஆதரவு தந்தனர். ஆனால் மைதானத்திற்கு 2569 பேர் மட்டுமே வந்தனர். சீன தைபேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.    
 

34 வயதான சுனில் சேத்ரி இந்திய கால்பந்து  உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். 2004-ஆம் ஆண்டு 20 வயதினருக்கு உட்பட்ட இந்திய அணியில் சுனில் சேத்ரி இடம்பெற்றார். 2005-ஆம் ஆண்டு சீனியர் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் கோலை அடித்தார். சேத்ரி 2007, 2011, 2013, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஏ.ஐ.பி.எஃப். சிறந்த வீரருக்கான விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். 
 

சேத்ரி சிறுவயதாக இருக்கும்போதே பல்வேறு கால்பந்து தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2002-ஆம் ஆண்டு மொஹுன் பாகான் என்ற கிளப் அணிக்காக விளையாடத் தொடங்கினார். இந்தியன் சூப்பர் லீக் தொடரில் 2013-2015 வரை பெங்களூர் எப்.சி. அணிக்கு விளையாடி வந்தார். பின்னர்  மும்பை எப்.சி. அணி அந்த தொடரில் அதிக விலையான 1.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது மீண்டும் பெங்களூர் எப்.சி. அணிக்கு விளையாடி வருகிறார். 2012-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற  ஏ.எப்.சி. சேலன்ச்கோப்பை தகுதி போட்டியில் சேத்ரி இந்திய அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். 
 

சேத்ரியின் தந்தை இந்திய இராணுவத்தின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் கார்ப்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். சேத்ரியின் தந்தை இந்திய இராணுவத்தில் கால்பந்து அணிக்கு விளையாடியுள்ளார். அதேபோல இவரது தாயார் மற்றும் சகோதரிகள் நேபாள பெண்கள் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடியுள்ளனர். 
 

இந்திய கால்பந்து அணி ஃபிபா தரவரிசை பட்டியலில் 2015-ஆம் ஆண்டு 173-வது இடத்தில் இருந்தது. தற்போது 103-வது இடத்தில் உள்ளது. 1950-1960 காலகட்டங்கள் இந்திய கால்பந்துக்கு பொன்னான காலம் என்றே கூற வேண்டும். இந்திய அணி ஃபிபா உலகக்கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்று இருந்தது. 1970-ஆம் ஆண்டுக்கு பிறகு சற்று  சோதனை காலமாக மாறிவிட்டது. தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்று சிறந்த அணியாக மாறி வருகிறது. பெரும்பாலும் மேற்கு வங்காளம், வடகிழக்கு இந்தியா, கோவா மற்றும் கேரளாவில் அதிகமாக இந்திய கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். சேத்ரி 2011-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதை பெற்றார். 2019-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்