Skip to main content

எங்கள் விளையாட்டையும் பார்க்க வாருங்கள்! - சுனில் ஷேத்ரி உருக்கமான வேண்டுகோள்

Published on 03/06/2018 | Edited on 03/06/2018

உலககோப்பை கால்பந்தாட்டப் போட்டி தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கின்றன. உலகின் தலைசிறந்த பல அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றன. இந்திய அளவிலும் கணிசமான ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால், அதே சமயம் இந்திய கால்பந்தாட்ட அணி ஒருபுறம் மிகச்சிறப்பாக ஆடியும் யாரும் அதன் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை. 
 

Sunil

 

இந்தியா, சீனா உள்ளிட்ட நான்கு அணிகள் கலந்துகொள்ளும் சர்வதேச கால்பந்தாட்ட போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை கால்பந்தாட்ட மைதானத்தில் சீன அணியை எதிர்கொண்டது இந்திய கால்பந்தாட்ட அணி. அந்தப் போட்டியில் இந்திய அணி 5  - 0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி சர்வதேச அளவில் தனது மூன்றாவது ஹாட்ரிக் கோல் சாதனையைப் பதிவு செய்தார். ஆனால், இந்த வெற்றியையும், சாதனையையும் கொண்டாட அன்றைய மைதானத்தில் யாருமே இல்லை.
 

இந்நிலையில், கென்யா மற்றும் இந்திய அணிகள் மோதும் கால்பந்தாட்ட போட்டி நாளை மும்பையில் வைத்து நடைபெறவுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரிக்கு இது நூறாவது சர்வதேச போட்டி ஆகும். இந்தியாவின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான சுனில் ஷேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகின் தலைசிறந்த அணிகள், கிளப்புகளைக் கொண்டாடும் இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களே.. எங்கள் விளையாட்டையும் கொஞ்சம் பார்க்க வாருங்கள். எங்களிடம் குறை இருக்கலாம். நாங்கள் அவர்களோடு ஒப்பிடும் அளவுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், ஒருநாள் எல்லாமே மாறும். மாற்றத்தை ஏற்படுத்த எங்களுக்கு உதவுங்கள். மைதானத்திற்கு வாருங்கள். எங்கள் விளையாட்டைப் பாருங்கள். எங்களை விமர்சியுங்கள், எங்களை நோக்கி கத்துங்கள், திட்டுங்கள், எங்கள் குறைகளைப் பற்றி விவாதியுங்கள். நீங்கள் நினைத்தால் மிகப்பெரிய மாற்றம் பிறக்க வாய்ப்பிருக்கிறது’ என இருகரம் கூப்பி உருக்கமாக வேண்டிக்கொண்டார். இந்திய கால்ப்பந்தாட்ட அணி உலக அளவில் 97ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

 

Next Story

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி; சாதனை படைத்த அண்ணாமலை பல்கலைக்கழக அணி 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Annamalai University's record-setting team at khelo India Games

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ - இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து அணி 2வது முறையாக வெற்றிபெற்றுள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ-இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த பிப்ரவரி 19 முதல் 29 வரை நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட  இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றனர். அந்த வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி, கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.

இந்த கால்பந்து லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அதில், அரையிறுதி போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியை, அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து. இறுதிப் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநானக் தேவ்பல்கலைக்கழகம் அணியை (3-2) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கேலோ-இந்தியா போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Annamalai University's record-setting team at khelo India Games

வெற்றி பெற்ற கால்பந்து அணி வீராங்கனைகள் இன்று (01-03-24) மதியம் ரயில் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு  திரும்பினார்கள். அப்போது, சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த வீராங்கனைகளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் அனைவருக்கும் மாலை அணிவித்து மேளதாளங்களுடன் வாழ்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்வில் உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜசேகரன், பொறியியல் புல முதன்மையர் கார்த்திகேயன், கல்வியியல் புல முதன்மையர் குலசேகர பெருமாள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஊழியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story

பெங்களூருவில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து போட்டி!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Football match on MGR's birthday in Bengaluru

பெங்களூர் ஸ்ரீ ராமபுரம் டாக்டர் அம்பேத்கர் மைதானத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து போட்டி மாநில அளவில் நடைபெற்றது. இந்த கால்பந்து போட்டியை சாந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் ஹாரீஸ் துவக்கி வைத்தார்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநில செயலாளர் கே. குமார் தலைமையில் ஒளி வெள்ளத்தில் (Flood Light) நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற சி ராமாபுரம் கால்பந்து வீரர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். முதல் பரிசாக இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. குக்ஸ் டவுனை சார்ந்த வீரர்கள் இரண்டாவது பரிசினை பெற்றனர். அவர்களுக்கு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணியினருக்கு கழக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு கோப்பைகளையும் பரிசையும் வழங்கினார். எம்.எஸ்.வி. அஸ்வித் சவுத்ரி, சுரேஷ் சந்திரா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த கால்பந்து போட்டிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.