2018 ஐ.பி.எல். தொடரின்போது தோனிக்கும், தனக்கும் இடையே நடைபெற்ற ஓட்டப்போட்டிக்கு பின்னால் உள்ள சுவாரசிய காரணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் பிராவோ.
இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிராவோ, "2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் ஒரு போட்டியின்போது, தோனி என்னை வயதானவர், வயதானவர் எனக்கூறி சீண்டிக்கொண்டே இருந்தார். மேலும், எனக்கு வயதாகிவிட்டதால்தான் வேகமாக ஓடமுடியவில்லை எனக்கூறி கிண்டல் செய்தார். அப்போது நான் அவரிடம், இருவரும் ஆடுகளத்தில் ஓடிப் பார்க்கலாமா, யார் வேகமாக ஓடுகிறார்கள் என்று பார்ப்போம் என்றேன்.
முதலில் அதற்கு மறுத்த தோனி பின்னர் ஒப்புக்கொண்டார். ஐ.பி.எல். தொடர் முடிந்தபிறகு சவாலை வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் போட்டியின் நடுவே இந்த சவாலால் யாராவது ஒருவருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இறுதிச்சுற்றுக்குப் பிறகு ஓட்டப் பந்தயத்தை வைத்துக்கொள்ளலாம் என்றேன். அப்படிதான் அந்த போட்டி நடைபெற்றது. அது மிகவும் கடுமையான போட்டி. நூலிழையில் அவர் என்னைத் தோற்கடித்தார். அவர் விரைவாக ஓடினார்" என்று கூறியுள்ளார்.