
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்தின் போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் தொடக்கப் போட்டி வரும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கிரிகெட் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது. முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது ரசிகர்களின் ஆசை நிறைவேறியுள்ளது.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவிக்கையில், “முழு உடல் தகுதியுடன் முகமது ஷமி இல்லாததால் அவரை இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யவில்லை.எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை” எனத் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் ( துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல் ( விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா குல்தீப், அர்ஷ்தீப், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.