“இந்து என்பதால் அவரிடம் பாகுபாடு காட்டினார்கள்”- ஷோயப் அக்தர் ஆதங்கம்

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, கடந்த 2000 ஆண்டு முதல் 2010 வரை பாக் அணியின் முக்கிய வீரராக இருந்தவர். கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் கனேரியா சிக்கினார். இதனால் பாக் கிரிக்கெட் வாரியம் அவரை சஸ்பெண்ட் செய்தது. அதன்பின் பலமுறை வீரர்களிடமும், வாரியத்திடமும் கனேரியா முயன்றும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

pakistan

இந்நிலையில் கனேரியா இந்து என்பதால் அவரை அனைவரும் ஒதுக்குகிறார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், “கனேரியா பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவதைப் பல வீரர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் கனேரியா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை யாருக்கும் பிடிக்கவில்லை, அவரின் பல்வேறு சாதனைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தது இல்லை. பல நேரங்களில் அவரின் திறமையை சக வீரர்களைக் கிண்டல் செய்துள்ளனர். பல நேரங்களில் கனேரியா அளித்த உணவைக்கூட சக வீரர்கள் சாப்பிட மறுத்திருக்கிறார்கள்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 3 அணிகள் மதவாதத்தைப் பற்றி பேசும்போது நான் சண்டையிட்டு இருக்கிறேன். அதாவது கராச்சியில் இருந்து வந்தவரா, பஞ்சாபியா, பெஷாவரைச் சேர்ந்தவரா என்று கேட்கும்போது நான் கோபப்பட்டுப் பேசி இருக்கிறேன். அணியில் இந்து மதத்தைச் சேர்ந்த கனேரியா இருந்தால் கூட அவர் அணிக்காகச் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்தானே.

ஆனால், கனேரியா உணவு கொண்டுவந்தால்கூட அவர் எப்படி உணவு கொண்டுவரலாம் என்று அணியில் மற்ற வீரர்கள் கேட்பார்கள். இதே கனேரியா இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியை வென்றுகொடுத்தவர்தானே.பாகிஸ்தான் அணியில் விளையாடி ஏராளமான விக்கெட்டுகளையும், வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தவர்தானே. கனேரியா முயற்சி இல்லாமல் நாங்கள் வென்றிருக்க முடியாது. ஆனால் பலரும் அவருக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை. அணியில் இந்து வீரர் என்பதால் பாகுபாட்டுடன்தான் நடத்தப்பட்டார்" எனத் தெரிவித்தார்

இவ்வாறு ஷோயப் அக்தர் பேசியதற்கு நன்றி தெரிவித்து டேனிஷ் கனேரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “நான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அணியில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன் என்று அக்தர் சொன்னது அனைத்தும் உண்மைதான்.

என்னுடைய வாழ்க்கை இப்போது நல்லவிதமாக இல்லை. என் வாழ்வில் ஏற்பட்ட குழப்பங்களைக் களையப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பல வீரர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகிகளைச் சந்தித்து எனது பிரச்சினைகளைக் களைய உதவி கேட்டும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் வீரராக இன்றும் நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இந்த நேரத்தில் எனக்குப் பாகிஸ்தான் மக்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

ஷோயப் அக்தரின் நேர்காணலைப் பார்த்தேன். பல உண்மைகளைப் பேசியமைக்காக அவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அதேசமயம், எனக்கு அணிக்குள் பலமுறை ஆதரவு தெரிவித்த வீரர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஊடகம், நேர்மையான கிரிக்கெட் நிர்வாகிகள், பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

cricket Pakistan shoaib akhtar
இதையும் படியுங்கள்
Subscribe