Skip to main content

ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்காதது மிகப்பெரிய இழப்பு - அப்ரிடி பேச்சு 

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

Shahid Afridi

 

ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கெடுக்க முடியாமல் போனது, பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரிய இழப்பாக உள்ளது என பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான அப்ரிடி தெரிவித்துள்ளார்.

 

பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடரானது உலக அளவில் புகழ்பெற்றது. பல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கெடுப்பதாலும், சர்வதேச போட்டிகளுக்கு இணையான அனுபவம் பார்வையாளர்களுக்குக் கிடைப்பதாலும் ஐபிஎல் போட்டிகளுக்கென்று உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான அப்ரிடி, ஐபிஎல் தொடர் குறித்தும், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.

 

அதில் அவர், "ஐபிஎல் தொடர் உலக அளவில் வரவேற்பைப் பெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் அதில் பங்கெடுக்க முடியாமல் போனது பெரிய துரதிர்ஷ்டம். பாபர் அஸாம் மாதிரியான வீரர்களுக்கு ஐபிஎல்-லில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது, சர்வதேச போட்டிகளில் நெருக்கடியின்றி விளையாடுவதற்கான அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும். சில அரசியல் காரணங்களால், வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது பெரிய இழப்பு" என்றார்.

 

மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் குறித்துப் பேசுகையில், "இந்தியாவில் விளையாடியபோது இந்திய மக்களிடம் இருந்து கிடைத்த அன்பும், ஆதரவும் மிகப்பெரியது. இப்போது சமூக வலைதளத்தில் நான் ஏதாவது பதிவிட்டாலும், இந்திய மக்களிடம் இருந்து பதில் வரும். நானும் அவர்களுடன் உரையாடுவேன். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் அற்புதமாக இருந்தது" எனக் கூறினார்.

 

 

Next Story

"தம்பி நீ பிறப்பதற்கு முன்பே சதமடித்தவன் நான்...” இளம் வீரரிடம் சீறிய அஃப்ரிடி

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

Shahid Afridi

 

 

இலங்கையில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவரை பாகிஸ்தான் முன்னாள் வீரரான அஃப்ரிடி கண்டிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இலங்கையில் உள்ளூர் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் லங்கன் பிரீமியர் லீக் எனும் பெயரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இலங்கை வீரர்கள் மட்டுமின்றி பிறநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் அஃப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியின் 18-ஆவது ஓவரின்போது காலி கிளாடியேட்டர்ஸ் வீரர் அமீருக்கும், கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம்வீரரான நவீன்-உல்-ஹக்கிற்கும் இடையே மோதல் வெடித்தது. பிற வீரர்கள் தலையீட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின் போட்டியின் முடிவில் அனைத்து வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும்போது நவீன்-உல்-ஹக்கை காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனான அஃப்ரிடி கண்டித்தார்.

 

அவரிடம் அஃப்ரிடி, "தம்பி நீ பிறப்பதற்கு முன்பே சர்வதேச போட்டிகளில் நான் சதமடித்தவன் எனக் கூறியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Next Story

தோனி குடும்பத்தின் மீதான விமர்சனம்... கொதித்தெழுந்த அஃப்ரிடி!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

Shahid Afridi

 

 

13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளால் தடுமாறி வருகிறது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 5 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்விகள் அணி நிர்வாகத்தை கவலையடையச் செய்துள்ளது. மேலும் சென்னை அணி ரசிகர்கள், வீரர்களின் நிலையற்ற ஆட்டம் குறித்தும், வீரர்கள் தேர்வு குறித்தும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சில ரசிகர்கள் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வரம்பு மீறிய விமர்சனத்தை முன்வைத்தனர். அந்தவகையில், தோனியின் மகள் குறித்து ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. அதனையடுத்து, தோனியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த நபரின் செயலை பலரும் கண்டித்து, தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

 

அதில் அவர், "தோனி மற்றும் அவர் குடும்பத்தின் மீது என்ன வகையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இது முற்றிலும் தவறானது, இது நடந்திருக்கக்கூடாது. தோனி, இந்திய கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு அழைத்து சென்றவர். தன்னுடன் விளையாடிய இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என அனைவரையும் முன்னேற்றியவர். தோனி இத்தகைய விமர்சனங்களுக்கு உரியவர் அல்ல" என கூறினார்.