Skip to main content

தோனியைக் காப்பியடித்த சர்ஃபராஸ்.. ஆனால் நடந்ததோ வேறு!

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
ss

 

 

 

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி அங்கு ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்கியது. இந்தத் தொடரில் 5 - 0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, புலவாயோவில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது முதன்முறையாக பந்துவீசினார். சர்வதேச போட்டிகளில் சர்ஃபராஸ் பந்துவீசுவது இதுவே முதன்முறை என்பதால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கவீரர் ஃபகர் ஸமானிடம் கீப்பிங் க்ளவுஸுகளைக் கொடுத்த சர்ஃபராஸ், போட்டியின் 48 மற்றும் 50-ஆவது ஓவர்களை வீசினார். 
 

 

 

முதல் ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த சர்ஃபராஸ், நம்பிக்கையுடன் வீசிய அடுத்த ஓவரில் பீட்டர் மூர் மிட்-விக்கெட் திசையில் அதிரடியாக சிக்ஸர் அடித்தார். இதன்மூலம், சர்ஃபராஸ் 2 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் கொடுத்தார். 
 

இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதன்முறையாக பந்துவீசினார். அந்த ஓவரிலேயே ட்ராவிஸ் டௌவ்லினை கிளீன் பவுல்டாக்கி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டைப் பதிவு செய்தார். சர்ஃபராஸ் அகமது தோனியைக் காப்பியடிக்கப்போய் தோற்றுவிட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர். 
 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.