Skip to main content

ருதுராஜ் கெயிக்வாட்டுடன் கைகோர்த்த பிரபல விளம்பர நிறுவனம்!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

Ruturaj Gaikwad

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. நடப்புத் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெயிக்வாட், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தொடக்க போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காத ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு சென்னை அணியின் பிற்பாதி போட்டிகளில் களமிறங்க தொடர் வாய்ப்பு கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ருதுராஜ் கெயிக்வாட், 6 போட்டிகளில் 3 அரை சதங்கள் விளாசி 204 ரன்கள் குவித்தார். 

 

இந்நிலையில், பிரபல விளம்பர நிறுவனமான 'பேஸ்லைன் வென்ச்சர்ஸ்' நிறுவனமும், ருதுராஜ் கெயிக்வாட்டும் புதிய ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி, வணிக நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் விளம்பர ஒப்பந்தங்களை இனி இந்நிறுவனம் கவனித்துக் கொள்ளும் .

 

பிவி சிந்து, புவனேஷ் குமார் உள்ளிட்ட பல முன்னணி விளையாட்டு வீரர்களோடும் பேஸ்லைன் வென்ச்சர்ஸ் நிறுவனம் இணைந்து பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சேப்பாக்கத்தில் செழுமையான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl score CSK vs gt ipl latest live score update chennai wins

ஐபிஎல் 2024 7 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறத் துவங்கியது. அந்த அணியின் கேப்டன் கில் 8 ரன்களில் விரைவிலேயே நடையைக் கட்டினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுபவ வீரரான சஹாவும் 21 பெரிதாக நிலைக்கவில்லை. பின்னர் இறங்கிய சாய் சுதர்சன் கடந்த ஆட்டத்தைப் போலவே இம்முறையும் பொறுப்பாக ஆடத் தொடங்கினார். அவருடன் சேர்ந்த மில்லர் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

ஆனால், அவரின் அதிரடி வெகு நேரம் நிலைக்கவில்லை. தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரஹானேவின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஒமர்சாயுடன் இணைந்த சுதர்சன் நிதானமாகவே ஆடி வந்தார். ஆனாலும் தவறான ஷாட்டால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒமர்சாயும் 11 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் வந்த ரஷித் 1, டெவாட்டியா 8, என வெளியேற, உமேஷ் 10, ஜான்சன் 5 என 20 ஓவர்களில் குஜராத் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story

CSK vs RCB: கேப்டனாக பாஸ் செய்த ருதுராஜ்; வெற்றிக் கணக்கைத் துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
CSK vs RCB ipl latest live score update csk wins the first match

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 17 வது சீசன் ஐபிஎல் தொடர் ஆனது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐபிஎல் தொடக்க விழாவானது ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மேலும் இந்த தொடக்க விழாவில் இந்தி பாடகர் சோனு நிகம் மற்றும் இந்தி நடிகர் அக்ஷய் குமார் டைகர் ஷெராப் உள்ளிட்டோர் ஏ. ஆர். ரகுமான் துள்ளல் இசைக்கு நடனமாடி ரசிகர்களை மகிழச் செய்தனர்.

தொடக்க விழா முடிந்த பின்பு முதல் ஆட்டம் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டூப்ளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆர். சி. பி அணிக்கு கோலி மற்றும் டூப்ளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டூ ப்ளசிஸ் அதிரடி காட்ட, கோலி நிதானம் காட்டினார். சிறப்பாக ஆடிய டூப்ளசிஸ் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.  அடுத்து வந்த, கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராஜட் பட்டிதார் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.  இவர்கள் இருவரின் விக்கெட்டையும் முஷ்டபிசுர் ரஹ்மான் அடுத்து அடுத்து எடுத்தார்.

அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்மெல்லும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு வந்த கேமரூன் கிரீன் மற்றும் கோலி இணை ஓரளவு பொறுமையாக ஆடியது.  கோலி 21 ரன்களுக்கும்,  கேமரூன் க்ரீன் 18 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டத்தில் கோலி 6 ரன்களை எடுத்தபோது டி20 கிரிக்கெட் 12000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ராவத் இணை சிறப்பாக ஆடியது. அதிரடி காட்டிய இருவரும் பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் அனுப்பிய வண்ணம் இருந்தனர்.  மிகச் சிறப்பாக ஆடிய ராவத் , தேஷ்பாண்டே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டார். தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார். ராவத்  48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஷ்டபிசுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரநாத் இணை களம் இறங்கினர். ஒருபுறம் கேப்டன் ருதுராஜ் பொறுப்புடன் ஆட மறுபுறம் ரச்சின் அதிரடியை கையில் எடுத்தார். ரச்சின் பேட்டில் இருந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களும் ஆக வந்த வண்ணம் இருந்தன. நன்றாக ஆடிய ருதுராஜை யாஸ் தயால் 15 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார். அடுத்து வந்த ரகானேவும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இருந்தாலும் இந்த அதிரடி இணையை கரண் சர்மா பிரித்தார். ரச்சின் ரவீந்திரா 37 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த டேரில் மிட்சலும் தன் பங்கிற்கு அதிரடியை காட்டினார். வந்தவுடன் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார். அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ரகானேவை,  கிரீன் 27 ரன்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்தார். டேரில் மிட்சலும் 22 ரன்களுக்கு கிரீன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. நிதானமாகவும் அதே போல தேவையான நேரத்தில் அதிரடியையும் காட்டிய இந்த இணை சிறப்பாக ஆடி சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய உதவி செய்தது. சிறப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 34 ரன்களும், சிவம் துபே 25 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தை புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது.