ADVERTISEMENT

மாஸ் பேட்டிங், சூப்பர் கேப்டன்ஷிப்... ஒரு போட்டி, பல சாதனைகள்... கலக்கும் ரோஹித் ஷர்மா

02:29 PM Nov 07, 2018 | tarivazhagan

2018-ஆம் ஆண்டு ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்வில் மிகசிறந்த ஆண்டுகளில் ஒன்று. இதற்கு முந்தைய ஆண்டுகளில் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி இருந்தாலும், இந்த வருடம் மாஸ் பேட்டிங் உடன் சேர்த்து கிடைத்த கேப்டன்ஷிப் பொறுப்பிலும் அசத்தி இருக்கிறார். ரோஹித் இந்த ஆண்டில் கேப்டனாக இருந்த 5 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு 8 டி20 போட்டிகளில் ரோஹித் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 7 வெற்றிகளை கண்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

விராட் கோலியின் ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் அணுகுமுறைக்கு முற்றிலும் நேர்மாறான அணுகுமுறை கொண்டவர் ரோஹித். பெரும்பாலும் கூலான அணுகுமுறையை கொண்டு அணியை வெற்றிக்கு அழைத்து செல்பவர் ரோஹித். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் கேப்டனாக இருந்து 3 முறை ஐபி.ல். கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். அந்த அனுபவம் அவருக்கு மிகவும் உதவுகிறது. பவுலிங் மாற்றங்களை மிகவும் சிறப்பாக செய்கிறார்.

அணி இக்கட்டான நிலையில் உள்ளபோது கூல் அணுகுமுறையுடன் ரோஹித் முடிவு எடுக்கும் திறன் சிறப்பான ஒன்று. இதுவரை 11 டி20 போட்டிகளுக்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். இதில் 10 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல 8 ஒரு நாள் போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். கேப்டனாக உள்ளபோது பேட்டிங் பாதிக்கப்படும் என்பற்கு முற்றிலும் மாறானவர் ரோஹித். கேப்டனாக அதிக பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெற செய்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 61 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உட்பட 111 ரன்கள் குவித்தார். போட்டியின்போது வர்ணனையாளர்கள், பந்து பேட்டிற்கு சரியாக வருவதில்லை எனவும், மிகவும் பெரிய அளவில் பேட்டிங்க்கு சாதகமானது இல்லை என்றும் கூறினார்கள். ஆனால் மற்ற வீரர்கள் ரன் எடுக்க தடுமாறிய போது அந்த மைதானத்திலும் அசத்தினார் ரோஹித். இந்தப் போட்டியில் பல்வேறு உலக சாதனைகளை புரிந்தார் ரோஹித். அதிக ரன்கள் எடுத்த வார்னர்-வாட்சன் இணையின் 1154 ரன்கள் சாதனையை முறியடித்தது ரோஹித்-தவான் இணை. நேற்று 123 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் எடுத்ததன் மூலம் 1268 ரன்கள் எடுத்து உலகின் நம்பர் 1 பார்ட்னர்ஷிப்பாக உள்ளது ரோஹித்-தவான் இணை.

இரண்டாவது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகில் முதல் முறையாக சர்வதேச டி20-யில் 4 சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித். இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ 3 சதம் அடித்துள்ளார். டி20-யில் கேப்டனாக இருந்து 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ரோஹித்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் பல சிக்சர்களை விளாசி, ஒரு நாள் போட்டிகளில் 200 சிக்சர்கள் என்ற மைல்கல்லை தாண்டினார். தற்போது 2-வது டி20-யில் 7 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 96 சிக்சர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் ரோஹித் உள்ளார். பிரன்டன் மெக்கல்லமின் 91 சிக்சர்கள் சாதனையை முறியடித்தார். 103 சிக்சர்களுடன் மார்டின் குப்தில், க்ரிஸ் கெயில் ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.

2102 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து இந்தியாவின் அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அடைந்தார். இதுவரை 78 இன்னிங்ஸ்களில் 15 அரை சதம், 4 சதம் உட்பட 2203 ரன்களை விளாசியுள்ளார். உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் மார்டின் குப்தில் 2271 ரன்களுடன் உள்ளார். இன்னும் 68 ரன்கள் எடுத்தால் அந்த சாதனையையும் ரோஹித் முறியடிப்பார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT