Skip to main content

ரோஹித் ஷர்மா சதம் அடித்தவுடன் அவுட் ஆவதில்லை...!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஆட்டத்தில் வானவேடிக்கை நிகழ்த்திய ரோஹித் ஷர்மா 137 பந்துகளில் 20 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட 162 ரன்கள் அதிரடியாக குவித்தார். இந்தத் தொடரில் ரோஹித் ஷர்மா அடிக்கும் இரண்டாவது 150-க்கு மேல் ரன்கள் இது. 7 முறை 150-க்கு மேல் ரன்கள் எடுத்து 150-க்கு மேல் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஷர்மா. இவருக்கு அடுத்ததாக சச்சின் - 5, வார்னர் - 5, கோலி - 4, ஆம்லா - 4, கெயில் - 4 , ஜெயசூரியா - 4 ஆகியோர் உள்ளனர்.

 

rr

 

2007-ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலககோப்பையை வென்றது. அந்த அணியில் முக்கிய பங்கு வகித்தவர் ரோஹித் ஷர்மா. அந்தத் தொடரில் அவருடைய ரன்கள் 50*, 8*, 30*. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 16 பந்துகளில் 30* ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். அதற்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவரால் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இதனால் அவர் அணியில் நிரந்தரமாக ஆட முடியவில்லை. அவ்வபோது அணியில் இடம் பெறுவதும், சில காலம் அணியில் இருந்து நீக்கபடுவதும் வாடிக்கையாக இருந்துவந்தது. 

 

ஐ.பி.ல். போட்டிகளில் 2008-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வந்தாலும் இந்திய அணியில் தடுமாறியே வந்தார் ரோஹித் ஷர்மா. ஆனால் 2013-ஆம் ஆண்டு அவரது கிரிக்கெட் வாழ்வின் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் ஷர்மா துவக்க ஆட்டகாரராக களமிறங்கினார். அந்த தொடரிலிருந்து இன்று வரை அவருக்கு ஏறுமுகம்தான்.

 

2013-க்கு முன்பு வரை 81 இன்னிங்க்ஸ்களில் பின்வரிசை வீரராக களமிறங்கி 1978 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தார். 2013-க்கு பிறகு 104 இன்னிங்க்ஸ்களில் துவக்க வீரராக களமிறங்கி 5413 ரன்களை குவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு முதல் இந்த வருடம் வரை ஒவ்வொரு வருடமும் அவருடைய பேட்டிங் சராசரி 50-க்கும் மேல் எந்தவொரு துவக்க ஆட்டக்காரரும் தொடர்ந்து இவ்வளவு வருடங்கள் 50-க்கும் மேல் சராசரியை பெற்றது இல்லை. ரோஹித் ஷர்மாவின் சராசரி 2013-க்கு பிறகு 59 என்பது குறிப்பிடத்தக்கது.

 

rr

 

ரோஹித் ஷர்மா இந்தியாவில் மட்டுமல்ல. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற வேகபந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துள்ளார். கடைசி 10 ஓவர்களில் அவரின்  பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 255. 

 

விராட் கோலி தன்னுடைய  37 சதங்களில்  16 முறை மட்டுமே 120-க்கும் மேல் ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் ஷர்மா தன்னுடைய 21 சதங்களில்  16  முறை 120-க்கும் மேல் ரன்கள் எடுத்து பெரிய சதங்களை அடிப்பதில் வல்லவராக திகழ்கிறார். ஷர்மா சதம் அடித்தவுடன் அவுட் ஆவதில்லை என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் எடுத்து காட்டுகின்றன. 

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஆட்டத்தில் 4 சிக்சர்கள் விளாசினார் ஷர்மா. அவருடைய மொத்த சிக்சர்களின் எண்ணிக்கை 198-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவர் சச்சினின் 195 சிக்சர்களின் எண்ணிக்கையை முறியடித்துள்ளார். நேற்று(29.10.2018) சதமடித்த ஷர்மா சென்ற ஆண்டு இதே தேதியில்(29.10.2017) நியூசிலாந்து அணிக்கு எதிராக 138 பந்துகளில் 147 ரன்கள் விளாசி இருந்தார்.

 

ஒரு காலத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளான ரோஹித் ஷர்மா, இன்று தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை படைத்து வருகிறார். இன்றைய கிரிக்கெட் உலகின் துவக்க ஆட்டத்தின் போக்கை மாற்றி வருகிறார். இன்று விளையாடி வரும் துவக்க ஆட்டக்காரர்களில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் ரோஹித் ஷர்மா. சச்சினுக்கு பிறகு அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைப்பது அரிதிலும் அரிது. ஆனால் தனக்கு என்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் ரோஹித் ஷர்மா என்பதே நிதர்சனம்.