Skip to main content

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

dhoni pant

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று (19 ஜன.) நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று களமிறங்கிய ரிஷப் பந்த், தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

 

இந்திய விக்கெட் கீப்பர்களில், டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் (இன்னிங்ஸ் அடிப்படையில்) என்ற சாதனை இதுவரை தோனியிடம் இருந்தது. தோனி 32 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் குவித்திருந்தார். தற்போது ரிஷப் பந்த், வெறும் 27 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்து, வேகமாக 1000 ரன்களைக் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 

சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டிகாக், டெஸ்ட்களில் அதிவேகமாக 1000 ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அவர், 21 இன்னிங்ஸில் 1000 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

பந்து வீச்சில் கலக்கிய ராஜஸ்தான்; ஜெய்ப்பூரில் கிடைத்த இரண்டாவது வெற்றி!

Published on 28/03/2024 | Edited on 29/03/2024
rr vs dc live score update rajasthan wins

ஐபிஎல் 2024 இன் 9ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார்.  பின்பு பட்லருடன் சாம்சன் இணைந்தார்.

ஆனால் சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் கலீல் அஹமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு பட்லருடன் ரியான் பராக் இணைந்தார். அந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பராக் அதிரடி காட்ட, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாறியது. அடுத்ததாக ஜுரேல் இறங்காமல், அஸ்வின் களமிறக்கப்பட்டார். அந்த முடிவு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. அஸ்வின் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜுரேலும் 20 ரன்களில் வீழ்ந்தார்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், மறுபுறம் பராக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். அடுத்த 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். ஹெட்மயரும் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. 

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிரடி துவக்கம் தந்த மார்ஷ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் டக் அவுட் ஆனார்.பின்னர் இணைந்த கேப்டன் பண்ட் நிதானம் காட்ட வார்னர் ஓரளவு அதிரடி காட்டினார். அரை சதம் அடிப்பார் வார்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில பந்துகளில் கேப்டன் பண்ட்டும் 28 ரன்களில் வீழ்ந்தார். பின்னட் வந்த ஸ்டப்ஸ் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். அபிஷேக் பொரேல் 9 ரன்னில் வெளியேற, அக்சர் படேல் வந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட , பந்து வீச வந்த சந்தீப் சர்மா முதல் இரண்டு பந்துகளில் 6, 4 என ஸ்டப்ஸ் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், தனது அனுபவம் மூலம் அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக வீசி அடுத்த 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட பந்து வீச வந்த ஆவேஷ் கான் சிறப்பாக வீசி ஸ்டப்ஸ், அக்சரை ரன் எடுக்க விடாமல் தடுத்தார். கடைசி ஓவரில் டெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டாவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆட்ட நாயகனாக ரியான் பராக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.