ADVERTISEMENT

அந்த ஒரு கேட்ச்.. அந்த ஒரு ஓவர்.. - பெங்களூரு எப்படி தோற்றது?

02:06 PM May 08, 2018 | Anonymous (not verified)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எஞ்சியிருந்த தன் கோப்பைக் கனவுகளை, நேற்றைய போட்டியில் கோட்டை விட்டிருக்கிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே தோல்வியைச் சந்தித்து வந்த பெங்களூரு அணி, ப்ளே ஆஃப்புக்குள் நுழையும் வாய்ப்பையும் நேற்றோடு தவற விட்டிருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நடைபெற்ற நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. மிகப்பெரிய மைதானம், குறைந்த ரன்கள் மட்டுமே அடிக்கமுடியும் போன்ற கணிப்புகள் எல்லாவற்றையும் உண்மையாக்கும் விதமாக பெங்களூரு அணியின் பவுலர்கள் நேற்று பந்துவீசினர். இந்த சீசன் முழுக்க அவர்கள் தொலைத்திருந்த அந்த மேஜிக், திடீரென்று வெளிப்பட்டாற்போல் பளிச்சென்று இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மிகச்சொற்பமான இலக்கென்றாலும், ஐதாராபாத் அணியின் பந்துவீச்சைக் கணக்கில் கொள்ளும்போது, இது போதுமானதாகவே இருந்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி, தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும், வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தின் தடுமாற்றம் அதன் விளையாட்டில் தெளிவாக தெரிந்தது. கேப்டன் கோலி மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஷகீப் அல் ஹசான் வீசிய பந்தை அடிக்கமுயன்றபோது, தவறுதலாக பட்டு தேர்டுமேன் திசையில் பறந்தது. கிட்டத்தட்ட சர்க்கிளைக் கடக்க இருந்த அந்த பந்தை யூசுப் பதான் ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சேஷிங்கில் கிங்கான கோலியின் அந்த விக்கெட் ஆட்டத்தையே மாற்றியது. பெங்களூரு அணிக்கு மீதமிருந்த ஒற்றை நம்பிக்கையான டிவில்லியர்ஸும் அடுத்த ஓவரிலேயே ரஷித்கானிடம் தன் விக்கெட்டைப் பறிகொடுத்து ஏமாற்றினார்.

நிதானமாக ஆடினாலே போதுமானது என்பதைப் புரிந்துகொண்டு விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பெங்களூரு அணி ஆட்டத்தைத் தொடர்ந்தது. மந்தீப் சிங் மற்றும் கிராண்ட்கோம் இணை கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்றது. கடைசி ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் மீதமிருக்க 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், புவனேஷ்வர் குமார் பந்துவீச வந்தார். பேட்ஸ்மேன்களின் லெக்பேட்களைக் குறிவைத்து வீசப்பட்ட யார்க்கர்கள் திணறடித்தன. அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காத நிலையில், புவனேஷ்வர் வீசிய கடைசி பந்தில் கிராண்ட்கோம் கிளீன் பவுல்ட் ஆகினார். இதன்மூலம், ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி பரிதாபமாக தோற்றது.

இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் மெர்சல் காட்டிய புவனேஷ்வர் குமார் பலரது மனதையும் கவர்ந்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு ஓய்வு தரும்படி ஐதராபாத் அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT