Skip to main content

"இது இரக்கமற்ற ஆட்டம்" - ஆர்.சி.பி பயிற்சியாளர் பெருமிதம்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

simon katich

 

13 -ஆவது ஐ.பி.எல் தொடரின் 39 -ஆவது லீக் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 7 வெற்றிகள், 3 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

இவ்வெற்றி குறித்துப் பேசிய பெங்களூரு அணியின் பயிற்சியாளர் சைமன் கட்டிச், "எங்கள் வீரர்கள் நிறைய பாராட்டுகளுக்கு உரியவர்கள். அவர்களது ஆட்டம் எனக்கு முழு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் பவுலர்கள் முதல் சில ஓவர்களிலேயே ஆட்டத்தை நிலை நிறுத்திவிட்டனர். மோரிஸ் மற்றும் சிராஜ் சிறப்பாக விளையாடினார்கள். சிராஜ் இரண்டாவது ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது எதிரணிக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. பவர் பிளேயிலேயே அடுத்த இரு விக்கெட்டுகள் வீழ்ந்தது, அவர்களை மீண்டு வர முடியாமல் செய்துவிட்டது. இது இரக்கமற்ற ஆட்டம்" எனக் கூறினார். 

 

 

 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

ஆர்.சி.பி அணியை அதிரடியால் கலங்க வைத்த கொல்கத்தா!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
rcb vs kkr ipl live score update kolkata registers a great victory

ஐபிஎல் 2024 இல் 10 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் கேப்டன்  டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு கேமரூன் கிரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் கோலியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை எடுத்து நரேன் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராஜத் பட்டிதார் மீண்டும் ஏமாற்றினார். 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஒருபுறம் வீரர்கள் தவறான ஷாட்டுகளால் ஆட்டம் இழந்த போதிலும் மறுபுறம் விராட் கோலி எப்போதும் போல தனக்குரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தன்னுடைய பினிஷிங் அதிரடியை காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, பட்டாசு வெடிப்பது போல் மைதானத்தில் பவுண்டரி மற்றும் சிக்சர்களால் கொல்கத்தா வீரர்கள் வாணவேடிக்கை நிகழ்த்தினர்.  சால்ட், நரைன் துவக்கமானது அதிரடியாக அமைந்தது. நரைன் 22 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயரும் தன் பங்கிற்கு காட்டடி அடித்தார்.

சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் அதிரடியைத் தொடர்ந்த வெங்கடேஷ் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பேட்டிங்கில் கலக்கி, பவுலிங்கிலும் ஒரு விக்கெட் எடுத்த நரைன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.