Skip to main content

இந்திய அணியின் அடுத்த ராகுல் டிராவிடா புஜாரா...?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது ஓவரில் களமிறங்கிய புஜாரா, 380 நிமிடங்கள் களத்தில் நின்று 246 பந்துகளை சந்தித்து 123 ரன்கள் எடுத்து 88-வது ஓவரில் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

 

pp

 

 

ஒருபக்கம் ஸ்டார்க் தலைமையில் புயல் வேகத்தில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள், மறுபக்கம் வெப்பநிலை 39 டிகிரி, மேலும் புஜாராவுக்கு எதிர்முனையில் மளமளவென விக்கெட்கள் சரிவு. ஆனால், சோதனைகளை தன்னுடைய நிதானம் கலந்த ஆட்டத்துடன் சந்தித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டார். 

 

டிராவிட்டின் நம்பர் 3 ஆட்டம், லக்ஷ்மனின் டெஸ்ட் ஸ்பெஷல், கிளாசிக் பேட்டிங் என டெஸ்ட் போட்டிக்கே உரித்தான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் புஜாரா. ஸ்டார்க் பந்தில் சிக்ஸ், அட்டகாசமான ஷாட்கள் என மறுபுறம் சில அதிரடியையும் ஆடி அசத்தினார் புஜாரா. தன்னுடைய சிறந்த டெஸ்ட் ஆட்டத்தின் மூலம் 1980, 1990-களில் ஆடிய சிறந்த டெஸ்ட் வீரர்களின் ஆட்டத்தை நினைவு கூறவைத்தார்.

 

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது அனைவரின் கவனமும் கோலியை நோக்கி இருந்தது. மேலும், இந்த தொடருக்கு முன்புவரை புஜாரா வெளிநாடுகளில் சரியாக ஆடுவதில்லை என்ற விமர்சனமும் இருந்தது. ஆனால் புஜாரா, தான் சிறந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்பதை மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் உலகிற்கு தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

 

pp

 

 

"விராட் கோலியின் சாதனைகளை போன்று புஜாராவின் சாதனைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. புஜாரா மிகவும் கிளாசிக் வீரர். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறவைப்பார். ஒரு சிறந்த அணிக்கு சிறந்த நம்பர் 3 முக்கியம். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியபோது டிராவிட் நம்பர் 3 ஆக இருந்தார். தற்போது வெளிநாடுகளில் இந்தியா சிறப்பாக விளையாடும்போது, புஜாரா நம்பர் 3 ஆக உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கோலி எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவு புஜாரா அணிக்கு முக்கியமான வீரர். ஆனால் அவரின் சாதனைகள் கவனிக்கப்படாமல் உள்ளன. அவரது புள்ளிவிவரங்களை பார்த்தாலே அவரது முக்கியத்துவம் புரியும்.” என்று மார்ச் மாதம் கங்குலி தெரிவித்திருந்தார். அந்த கூற்று இன்று உண்மையாகியுள்ளது. 

 

புஜாரா இதுபோல மராத்தான் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவது முதல் முறையல்ல. இந்திய அணி தடுமாறும்போது, பலமுறை அணியை மீட்டுள்ளார். 2012-ஆம் ஆண்டில் வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் ஸ்கில்களை அற்புதமாக வெளிப்படுத்தினார். மான்டி பனேசர் மற்றும் கிரேம் ஸ்வான் ஆகியோரின் பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. கவுதம் கம்பீர், விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி, யுவராஜ் சிங், தோனி என ஒருபுறம் விக்கெட்கள் சரிந்து கொண்டிருந்தன. ஆனால், மறுமுனையில் 451 நிமிடங்கள் களத்தில் விளையாடி, 350 பந்துகளில் 135 ரன்களை எடுத்து அணியை காப்பாற்றினார் புஜாரா. இப்படி பலமுறை மராத்தான் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். 

 

இந்த சதம் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் தனது முதல் சதத்தை அடித்தார். விஜய் மஞ்ச்ரேகர், சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், விராட் கோலி மற்றும் முரளி விஜய் ஆகியோருக்கு பிறகு ஆசியாவிற்கு வெளியே, ஒரு டெஸ்ட் போட்டியில் தொடக்க நாளில் சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இது அவரது 16-வது டெஸ்ட் சதமாகும்.

 

ஆட்டத்தில் மட்டுமல்ல. புள்ளிவிவரங்களிலும் டிராவிட்டை ஒத்துபோகிறார் புஜாரா. டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 67வது இன்னிங்ஸில் 3000, 84வது இன்னிங்ஸில் 4000 மற்றும் 108வது இன்னிங்ஸில் 5000 ரன்களை குவித்தார். அதே இன்னிங்க்ஸ்களில் புஜாராவும் அந்த மைல்கல்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

"இந்த சதத்தை விட சிறந்த டெஸ்ட் சதத்தை அவரிடம் பார்த்திருக்கிறீர்களா?. அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் டிரைவ் ஷாட்கள் ஆட முற்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் அற்புதமாக தன்னுடைய ஆட்டத்தை அமைத்தார் புஜாரா. அவரின் சிக்ஸ் மிகவும் என்னை கவர்ந்தது. அடிலெய்டு ஓவலில் நீங்கள் பார்த்த சிறந்த சதங்களில் இதுவும் ஒன்றாகும்." என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமன் கூறியுள்ளார். 

 

"அணியினர் என்னுடைய சிறந்த சதம் என்று கூறுகின்றனர். என்னால் இதை சிறந்த சதமாக கருத முடியவில்லை. என்னுடைய சிறந்த 5 ஆட்டங்களில் இதுவும் ஒன்று.” என்று புஜாரா முதல்நாள் ஆட்டத்தை பற்றி தெரிவித்தார். வெளிநாடு டெஸ்ட் போட்டிகளில் புஜாராவின் திறமைகளையும், முக்கியத்துவத்தையும் அன்றே கங்குலி துல்லியமாக கணித்தது சிறப்பு வாய்ந்தது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்