Skip to main content

அமித் மிஸ்ராவிற்கு பதில் புதிய வீரர் சேர்ப்பு!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Pravin Dubey

 

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி அணியைச் சேர்ந்த அமித் மிஸ்ராவிற்கு, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின்போது கைவிரலில் காயம் ஏற்பட்டது. பின் நடந்த மருத்துவப் பரிசோதனையில் காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அமித் மிஸ்ரா அறிவித்தார். இந்நிலையில், அமித் மிஸ்ராவிற்கு பதிலாக பிரவீன் துபே என்ற வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

பிரவீன் துபே கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார். லெக் ஸ்பின்னரான பிரவீன் துபே இதுவரை கர்நாடக அணிக்காக 14 உள்நாட்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி,16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

டெல்லி அணி, நாளை நடைபெற இருக்கிற 38-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோத இருக்கிறது. இப்போட்டியில், பிரவீன் துபே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

ஐ.பி.எல்- இல் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
 Rohit Sharma set a new record in IPL

ஐபிஎல்-இல் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2024 இன் 20ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலி பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை அதிரடி துவக்கம் தந்தது. முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது. அதிரடியாக ஆடினாலும் இருவரும் அரை சதத்தை தவற விட்டு ரோஹித் 49 ரன்களிலும், இஷான் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து வந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா டக் அவுட் ஆனார், திலக் வர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஹர்திக், டிம் டேவிட் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹர்திக் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரொமாரியோ ஷெப்பெர்டுடன், டிம் டேவிட் இணைந்து அதிரடி காட்டினர். முக்கியமாக 10 பந்துகளை மட்டுமே சந்தித்த ரொமாரியோ 39 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் இறுதி ஓவரான நோர்க்யா ஓவரில் 4 சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெடுகள் இழப்பிற்கு  234 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இது 4ஆவது அதிகபட்ச ஸ்கோராகும்.

பின்னர் ஆடிய டெல்லி அணிக்கு வார்னர் 10, விரைவில் ஆட்டமிழந்தாலும், பிரித்வி ஷாவும், பொரேலும் இணைந்து அதிரடியாக ஆடினர்.  2ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த இந்த இணையை பும்ரா பிரித்தார். பிரித்வி ஷா 66 ரன்களில் பும்ரா பந்தில் போல்டானார். பொரேல் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஸ்டப்ஸ் மட்டும் தனியாளாகப் போராடி 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். ஆனாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலிலும் 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இந்த ஆட்டத்தில் 8 ஆவது விக்கெட்டாக ரிச்சர்ட்ஸன் ரோஹித் சர்மாவின் கேட்சால் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 100 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். இது ஐபிஎல்-இல் 4ஆவது அதிகபட்ச கேட்சாகும். மும்பை அணி சார்பாக 2ஆவது அதிகபட்ச கேட்சாகும். பொல்லார்டு 103 கேட்சுகளுடன் மும்பை அணி சார்பாக அதிக கேட்சுகள் பிடித்துள்ளார். ஐபிஎல் இல்  110 கேட்சுகளுடன் கோலி முதலிடத்திலும், ரெய்னா 109 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்திலும், பொல்லார்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Next Story

கேப்டனுக்கு மீண்டும் எதிர்ப்பு; எல்லை மீறிய ரசிகர்கள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Rohit fans who crossed the line for Opposition to hardik pandya for Captain

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இரண்டு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. ஐ.பி.எல். 2024 போட்டியில் 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. 

அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களில் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் குறைந்தனர்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்னான அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலே, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் 2024 இன் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.  அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்... ரோஹித்.... ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.