Para Olympic Games; Another gold medal for India

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் 17 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனை களமிறங்கினர். இதில் ஒட்டுமொத்தமாக ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்திய அணி வென்றது. இதனையடுத்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதில் இந்தியா சார்பில் 84 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisment

இதன் ஒரு பகுதியாக 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா 2ஆவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வாலும் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். மேலும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இறுதிப்போட்டியில் 8 வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியில், இந்திய வீராங்கனை ரூபினா 211.1 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக பிரீத்தி பால் வெண்கல பதக்கம், ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷார் குமார்ஜே வெள்ளிப் பதக்கம் எனத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இந்நிலையில் பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் இன்று (02.09.2024) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பிரிட்டன் வீரர் டேனியல் பெதெல்லை 21க்கு 14, 18க்கு 21, 23க்கு 21 செட் கணக்கில் வீழ்த்தி அபார சாதனை புரிந்துள்ளார். அதே சமயம் ஆடவர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார். இதன் மூலம் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.