Skip to main content

பாகிஸ்தான் வெறி ஆட்டம்! - புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடம்! 

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Pakistan won against Sri Lanka

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி இன்று தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான குசால் பெராரா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசங்கா 51 ரன்களில் ஆட்டம் இழந்தார். 

 

அந்த அணியில் இரு வீரர்கள் சதம் விளாசி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். அதன்படி இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் 77 பந்துகளில் 6 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் அடித்து 122 ரன்கள் குவித்தார். அதேபோல், சதீரா சமரவிக்ரம 108 ரன்களை விளாசினார். இலங்கை அணி மொத்தம் 50 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்களை இழந்து 344 ரன்களை குவித்தது. 

 

பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல், ஹரிஸ் ராப் 2 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து 345 ரன்கள் இலக்குடன் விளையாட துவங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அப்துல்லா ஷபீக் சிறப்பாக ஆடி 3 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் விளாசி 103 பந்துகளில் 113 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பாபர் அசாம், 10 ரன்களும், சவுத் ஷகீல் 31 ரன்களும் எடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். இறுதி வரை அவுட் ஆகாமல் முகமது ரிஸ்வான் 121 பந்துகளில் 3 சிக்சர்கள், 10 பவுண்டரிகளை விளாசி 134 ரன்கள் குவித்தார். அதேபோல், இப்திகார் அகமது 22 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

 

இறுதியில் பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 348 ரன்களை விளாசி வெற்றி பெற்றது. இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க இரண்டு விக்கெட்களையும், மகேஷ் தீக்ஷனா மற்றும் மதீஷ பத்திரனா தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றினர். 

 

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரு அணிகளும் 2023 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தை இன்று ஆடியதில் இலங்கையை பாகிஸ்தான் வீழ்த்தியது மூலம், பாகிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் இரு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இலங்கை தோல்வி அடைந்ததன் காரணமாக புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திலும் உள்ளது.