Pakistan qualified for the final. Amazing to beat New Zealand in the semi-final

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாம் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

Advertisment

இதில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஃபின் ஆலன் 4 ரன்களில் வெளியேற கான்வே 21 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார். அதன் பிறகு வந்த ஃபிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேற வில்லியம்சன் மற்றும் மிட்சல் ஆகியோர் பொறுமையாக ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 152 ரன்களை எடுத்தது.

153 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முகம்மது ரிஸ்வான் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தான் அணி முதல்விக்கெட்டிற்கு 105 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய பாபர் ஆசம் 53 ரன்களில் வெளியேறினார். இதன் பின் முகம்மது ஹாரிஸ் உடன் கைகோர்த்த ரிஸ்வான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தைக் கடந்தார். 57 ரன்களில் ரிஸ்வான் வெளியேற பாகிஸ்தான் அணிக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இறுதியில் ஒரு ஓவருக்குஇரண்டு ரன்கள் தேவைப்பட 19.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத்தகுதி பெற்றது. நாளை நடக்கும் இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி 13 ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.

Advertisment