Skip to main content

அரையிறுதி வாய்ப்பை இழுத்துப் பிடித்த பாகிஸ்தான்; வங்கதேசத்தின் நிலை?

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Pak vs ban worldcup cricket score update pakistan wins bangladesh

 

உலகக் கோப்பையின் 31 வது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

 

டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சான்டோ 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹீம் 5 ரன்களில் ஆட்டம் இழக்க,  23 - 3 என்று தவித்தது. பின்னர் லிட்டன் தாசுடன் இணைந்த மெகமதுல்லா அணியை சரிவில் இருந்து மீட்டார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஷகிப்புடன் இணைந்த மெஹ்மத்துல்லா நிதானமாக ஆடி அரை சதம் கடந்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சகிப்பும் தனக்குரிய பொறுப்புடன் ஆடி 43 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இறுதிக்கட்டத்தில் மெகதி ஹசன் 25 ரன்கள் எடுக்க வங்கதேச அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹரிஷ் இரண்டு விக்கெட்டுகளும், இப்திகார் மற்றும் ஒசாமா மிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

Pakistan snatched the semi-final opportunity; The status of Bangladesh?

 

பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஃபிக் மற்றும் ஜமான் சிறப்பான துவக்கம் தந்தனர் இருவரும் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 128 ரன்கள் சேர்த்தனர். அரை சதம் கடந்த சஃபிக் 68 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களில் ஆட்டம் இழக்க,  சிறப்பாக ஆடிய ஜமான் அரைசதம் கடந்து 81 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரிஸ்வானும் இப்திகார் அகமதும் இணைந்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.  பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் வெற்றிக்கு தேவையான 205 ரன்களை அடைந்தது. முகமது ரிஸ்வான் 26 ரன்கள் எடுத்தும், இப்திகார் அகமது 17 ரன்கள் எடுத்தும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் ஜமான் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி மூன்று வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் அனைத்து துறைகளிலும் தோல்வியுற்று, ஆட்டத்தைப் பறிகொடுத்த பாகிஸ்தான் அணி, இந்த போட்டியில் பௌலிங், பீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஓரளவுக்கு வாய்ப்புகள் இருக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

 

இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் வங்கதேச அணி முதல் அணியாக உலக கோப்பையில் இருந்து வெளியேறுகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளின் அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில், அடுத்த இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பாதிக் கடலை தாண்டி விட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் எந்த ஆசிய அணி அரையிறுதி செல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஆர்வத்தை கூட்டி வருகிறது. இந்தக் கடும் போட்டி உலகக் கோப்பை போட்டிகளை மேலும் சுவராசியமாக்கி உள்ளது.

- வெ.அருண்குமார்