ADVERTISEMENT

அன்று குண்டு மழையில் தவித்தவர்... இன்று உலகின் நம்பர் 1 வீரர்...

10:43 AM Jan 28, 2019 | tarivazhagan

தென்கிழக்கு ஐரோப்பா பகுதியில் ஒரு சிறிய நாடு செரிபியா. 1998-ல் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 87 லட்சம் மக்கட்தொகை கொண்ட போர் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்தவர் ஜோகோவிக். இன்று உலகில் அனைவரும் கொண்டாடப்படும் டென்னிஸ் வீரராக மாறி அந்த நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2008-ஆம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரபேல் நடால் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் விளையாடிய போட்டிக்கு பிறகு நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரின் இறுதிப்போட்டியை டென்னிஸ் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக கவனித்தனர். இறுதிப்போட்டியில் உலகின் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள வீரர்களான நோவக் ஜோகோவிக் மற்றும் ரபேல் நடால் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை வென்றார் ஜோகோவிக். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றார் நோவக் ஜோகோவிக். ஆஸ்திரேலியா ஓபன் தொடரை வென்று 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். இதுவரை 53 முறை இருவரும் நேருக்கு நேர் விளையாடியதில் ஜோகோவிக் 28 முறையும், நாடல் 25 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

2018-ஆம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருவரும் சந்தித்தனர். டென்னிஸ் போட்டிகளில் வரலாற்று சிறப்பு மிக்க இரண்டாவது மிகப்பெரிய போட்டியாக மாறியது. மேலும் அவர்கள் மூன்றாவது முறையாக ஐந்து செட் வரை விளையாடினர். இரண்டு நாட்கள் நீடித்த இந்த போட்டி 5 மணி நேரம் 17 நிமிடங்கள் வரை விளையாடினர். இந்த போட்டியில் ஜோகோவிக் வெற்றி பெற்றார்.

நான்கு வயதில் டென்னிஸ் விளையாடுவதை தொடங்கிய ஜோகோவிக் இன்று நம்பர் 1 வீரராக இருந்து வருகிறார். ஜோகோவிக் பெற்றோர் பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வந்தனர். 6 வயதில் ஜோகோவிக் டென்னிஸ் விளையாடியதை பார்த்த டென்னிஸ் கோச் ஜெலெனா ஜென்சிக், ‘நான் பார்த்த மிகப்பெரிய திறமை வாய்ந்த டென்னிஸ் வீராங்கனை மோனிகா செலஸ்க்கு அடுத்து திறமையான வீரர் ஜோகோவிக் தான்’ என்று கூறினார். 14 வயதில் தனது சர்வதேச டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கி ஐரோப்பிய சாம்பியன் தொடரில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு போட்டிகளில் வென்றார் ஜோகோவிக்.

2008-ஆம் ஆண்டு முதல் மாஸ்டர்ஸ் கப் தொடரை வென்றார். அதே ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். 2009-ஆம் ஆண்டு கலந்துகொண்ட 10 தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று 5 தொடரில் வெற்றி பெற்றுள்ளார். 2011-ஆம் ஆண்டு 10 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளார். அதே ஆண்டு உலகின் முதல் வீரர் என்ற சிறந்த இடத்தை அடைந்தார். 2017-ஆம் ஆண்டு முழங்கை காயத்தின் காரணமாக அந்த ஆண்டு முழுவதும் ஓய்வில் இருந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு 2018-ஆம் ஆண்டு மீண்டும் முதல் இடத்திற்கு வந்தார். இதுவரை 7 முறை ஆஸ்திரேலியா ஓபன் தொடரையும், ஒரு முறை ஃபிரென்ச் ஓபன் தொடரையும், 4 முறை விம்பிள்டன் தொடரையும், 3 முறை யு.எஸ் ஓபன் தொடரையும் வென்றுள்ளார்.

ஜோகோவிக், "சாம்பியன் ஃபார் பீஸ்" என்ற கிளப்பின் உறுப்பினராக உள்ளார். இது உலகின் சமாதானத்தை பரப்புவதற்காக புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் கொண்ட அமைப்பு. அமைதி மற்றும் விளையாட்டை ஊக்கப்படுத்துவதை மையமாக கொண்டது. யுத்தத்தின் போது நடைபெற்ற தாக்குதல்கள் மூலம் துன்பத்தை எப்படி கையாள்வது என்று கற்றுக் கொண்டதாக டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரர் நோவக் ஜோகோவிக் பலமுறை தெரிவித்துள்ளார். ஜோகோவிக் தனது நாட்டு இளைஞர்கள் வாழ்க்கை யுத்தத்தால் அழிக்கப்பட்டதையும், மீண்டும் அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொண்டு, பலருக்கும் உதவி வருகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT