Skip to main content

“செஸ் ஒலிம்பியாட்டில் ஒரு புகார் கூட பெறவில்லை” - உலக செஸ் கூட்டமைப்பின் தலைவர் பெருமிதம் 

 

சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய பி அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உலக செஸ் கூட்டமைப்பின் தலைவர் பரத் சிங் சவுகான், இந்திய செஸ் வீரகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். இந்திய ஓபன் பிரிவு பி அணியில் இடம்பெற்று வெண்கலம் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

முன்னதாக மேடையில் உரையாற்றிய பரத் சிங் சவுகான், “ஒலிம்பியாட் நடத்தி முடிப்பது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் நாங்கள் நடத்தி முடித்தோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் செஸ் ஒலிம்பியாட்டின் உண்மையான கதாநாயகன். இரண்டு மாதங்களில் 185 நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர்களுக்கு விசா வழங்குவது கடினம். ஆனால் அதனை நடத்தி முடித்தோம்.


செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒரு வீரர் கூட உணவு குறித்து புகார் தெரிவிக்கவில்லை. இதற்கு முன் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் வீரர்கள் எதாவது ஒரு குறை சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக உணவை பற்றி அதிகம் குறை கூறி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒரு வீரரிடம் இருந்து கூட உணவு பற்றி ஒரு புகார் கூட பெறவில்லை. தமிழ்நாடு அரசு சிறப்பாக உதவி புரிந்தது. 4 மாதங்களில் ஒரு ஒலிம்பியாட் போட்டியை நம்மால் நடத்தி முடிக்க முடிந்தது என்றால் நாம் எவ்வளவு ஒலிம்பியாட் போட்டிகள் வேண்டும் என்றாலும் நடத்தலாம்” என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !