Skip to main content

செய்த தவறுக்கு தண்டனை; மேல்முறையீடு கிடையாது! - ஸ்மித் அறிவிப்பு

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

 

தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது போட்டி, கேப்டவுனில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இதில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், நான்காவது போட்டியில் விளையாட ஸ்மித், பான்கிராஃப்டுக்கு தடை விதித்த ஐசிசி போட்டிக்கட்டணத்தில் முறையே 100% மற்றும் 75% அபராதம் விதித்து உத்தரவிட்டது.

 

இருந்தபோதிலும், இந்த விவகாரம் ஆஸி. கிரிக்கெட் வாரியத்திற்கே ஏற்பட்ட இழுக்கு என்று பலரும் பேச, சம்மந்தப்பட்ட வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்களும் தடைவிதித்து உத்தரவிட்டது.

 

 

இந்நிலையில், இந்தத் தடை உத்தரவை எதிர்த்து வீரர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அணியை வழிநடத்திய கேப்டன் என்கிற முறையில், நடந்த தவறுகள் அனைத்திற்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அதனால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யபோவதில்லை. செய்த தவறை உணர்த்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா தந்துள்ள இந்தத் தண்டனை நான் ஏற்றுக்கொண்டேன்’ என பதிவிட்டுள்ளார்.  

Next Story

இந்தியாவிற்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: ஸ்மித்தால் 300 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

smith

 

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று (07/01/2021) தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விரைவில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அறிமுக போட்டியில் களமிறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி அரைசதமடித்து, 62 ரன்களில் சைனி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபூஷனே, நிலைத்து நின்று ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய லபூஷனே அரை சதமடித்தார். முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 166 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 

இரண்டாம் நாளான இன்று (08/01/2021) லாபூஷனே 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபுறத்தில் சிறப்பாக ஆடிய ஸ்மித், 131  எடுத்த நிலையில் ஜடேஜாவால் ரன்அவுட் செய்யப்பட்டார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி, 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது.

 

இந்திய அணி தரப்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

 

Next Story

விஸ்டெனின் இந்திய - ஆஸ்திரேலிய அணி: ஸ்மித் தேர்வு.. கோலிக்கு இடமில்லை!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

kumble laxman

 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு 'ஆஷஸ்' எனப் பெயர் இருப்பதைப்போல், இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கு, 'பார்டர்- காவஸ்கர்' கோப்பை தொடர் என்ற பெயருள்ளது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர், இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் ஆகிய இருவரையும் கவுரவிக்கும் விதமாக, இரு அணிகளும் மோதும் தொடருக்கு, அவர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 

தற்போது கிரிக்கெட் உலகின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டென் புத்தகம், 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 'பார்டர்-காவஸ்கர்' தொடர் அணியை தேர்ந்தெடுத்துள்ளது. இரு அணிகளின் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள அந்த அணிக்கு இந்தியாவின் அனில் கும்ப்ளே கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

 

விஸ்டெனின் 21ஆம் நூற்றாண்டு அணியில், இந்திய தரப்பில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலிக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.

 

21 ஆம் நூற்றாண்டின் 'பார்டர்- காவஸ்கர்' தொடர் அணி பின்வருமாறு: ஹைடென், சேவாக், ஸ்மித், சச்சின், கிளார்க், லக்ஷ்மன், கில்கிறிஸ்ட், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜேசன் கிலெஸ்பி, மெக்ராத்.