Skip to main content

தோனியின் அடையாளம் இனி யாருக்கும் கிடையாது.. என்ன செய்திருக்கிறது பி.சி.சி.ஐ?

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
No one knows Dhoni's identity anymore.. What has BCCI done?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 1998ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க காலத்தில் ரயில்வேயில் டிடிஆர் ஆக பணியாற்றிய தோனி, பிறகு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் தோல்வியை மட்டும் சந்தித்த தோனி, அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடி தனது கடும் உழைப்பால் இந்திய அணியின் கேப்டன் வரை வளர்ந்தார். 

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு, தோனி தலைமையிலான இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, 2007 டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய உலகக்கோப்பைகளையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது. அதன் காரணமாகவே, தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், ‘கூல் கேப்டன்’, ‘பெஸ்ட் ஃபினிஸர்’ எனவும் ரசிகர்கள் மத்தியில் இவர் அழைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய தோனி, கேப்டனாக தலைமையேற்று 4 கோப்பைகளை பெற்று கொடுத்துள்ளார். மேலும், பல தொடர்களில் இந்திய அணிக்காக வெற்றிகளை வாரி வழங்கியுள்ளார். கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் முதலே தோனி ஜெர்ஸி எண் 7ஐ அணிந்து விளையாடி வந்தார். தோனி பிரபலமடைந்ததைப் போல, அவருடைய ஜெர்ஸி எண்ணும் பிரபலமடைந்தது. தோனியின் ஜெர்ஸி நம்பரான ‘7’ ரசிகர்களிடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் கொண்டிருந்தது. இதனையடுத்து, பல சாதனைகளை படைத்த தோனி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

சர்வதேச போட்டிகளில் தோனி ஓய்வு பெற்றிருந்த போதிலும், அவருடைய ஜெர்ஸி நம்பரான 7 இதுவரை எந்த வீரருக்கு அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தோனியின் ஜெர்ஸி நம்பர் ‘7’க்கு ஓய்வு அளித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட்டிற்கு, முன்னாள் கேப்டன் தோனி அளித்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம், ‘7’ஆம் நம்பர் பொறித்த ஜெர்ஸியை இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் இனி பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக முன்னாள், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில், அவரது 10ஆம் நம்பர் ஜெர்ஸிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிசிசிஐ ஓய்வு அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Gautam Gambhir appointed as coach of Indian cricket team

டி-20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதனையடுத்து இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 27 ஆம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த கிரிக்கெட் தொடரில் இருந்து கம்பீர் இந்த பொறுப்பை ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து கவுதம் கம்பீர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “இந்தியா எனது அடையாளம். எனது நாட்டிற்குச் சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். கிரிக்கெட்டில் தற்போது வித்தியாசமான தொப்பி அணிந்தாலும், கிரிக்கெட் விளையாட்டிற்குத் திரும்பி வந்ததில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 1.4 பில்லியின் இந்தியர்களின் கனவுகளை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Gautam Gambhir appointed as coach of Indian cricket team

இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் கௌரவ செயலாளர் ஜெய்ஷா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் கௌதம் இந்த மாறிவரும் சூழலில் அருகில் இருந்து பார்த்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, பல்வேறு நேரங்களில் சிறந்து விளங்கியதால் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இந்திய அணிக்கு பரிசுத்தொகை வழங்கி கவுரவித்த பிசிசிஐ!

Published on 04/07/2024 | Edited on 05/07/2024
BCCI honored the Indian team with prize money

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் இன்று (04.07.2024) காலை டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை  வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கியது. டி20 உலகக் கோப்பை சாம்பியன்களைக் காணத் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களின் கடல் அலைகளுக்கு இடையே இந்த அணிவகுப்பு பேருந்து சென்றது. இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. 

BCCI honored the Indian team with prize money

தங்கள் வெற்றி அணிவகுப்பில் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி 20 உலகக் கோப்பையை உயர்த்திக் காட்டினர். இந்திய அணியினரின் வெற்றி அணிவகுப்புக்குப் பிறகு அவர்களின் பேருந்து மும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழைந்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நடனமாடினர்.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ அதிகாரிகள் வழங்கினர். முன்னதாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு இந்தியா அணிக்கு ரூ.125 கோடியை பரிசுத் தொகையாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் இருந்து இந்திய அணியினர் தாஜ் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) அதிகாரிகள் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.