Skip to main content

ஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் வார்னர் தனது பேட்டில் புது டெக்னாலஜி மூலம் இயங்கும் சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பேட் கொண்டு பயிற்சி எடுத்து வருகிறார். 

இந்த வகையான சிப்பை பயன்படுத்த 2017-ஆம் ஆண்டு ஐசிசி அனுமதி வழங்கியது. இதை பற்றிய தெளிவான விழிப்புணர்வு கிரிக்கெட் வீரர்களிடம் அதிகமாக இல்லை. ஆனால் வார்னர் இதன் முக்கியத்துவத்தை அறிந்து வலைப்பயிற்சியின் போது ஸ்மார்ட் பேட் பயன்படுத்தி வருகிறார். 

 

new technologies in cricket coaching

 

 

பேட் சென்ஸ் எனப்படும் இந்த வகையான சிப்பை பெங்களூரில் உள்ள நிறுவனம் தயாரித்துள்ளது. பேட்டின் மேல் பகுதியில் சிப் பொருத்தப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் போது பந்தின் வேகத்திற்கு ஏற்ப பேட்டின் நகர்வு இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டின் அசைவு, அதிர்வு போன்றவை மொபைல் மூலம் கிளவ்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும்.

பேட்டின் வேகம், கையை சுழற்றும் திசை என பல பேட்டிங் அசைவுகளை கணிக்க முடியும் அளவிற்கு சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பின் டேட்டா அளவீட்டின்படி வார்னரின் பேட்டின் வேகம் 79 கிமீ அளவு உள்ளது.  

இது போன்ற ஸ்மார்ட் பேட் மூலம் பயிற்சியாளர் பேட்ஸ்மேன்களின் தவறை அறிந்து, அவற்றை சரி செய்ய ஆலோசனை வழங்க அதிக அளவில் வாய்ப்புள்ளது. பும்ரா போன்ற டாப் கிளாஸ் ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ரஷித் கான் போன்ற ஸ்பின் பவுலர்களுக்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கு இது போன்ற டெக்னாலஜி பெரிதும் உதவியாக இருக்கும். 

கடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் டிரான் கேமரா மற்றும் சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பேட் ஆகிய சில புது டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த தொடரில் பேட்டில் 25 கிராம் எடையுள்ள சிப்பை இங்கிலாந்து வீரர்கள் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் பயன்படுத்தினர். இது போன்ற புது புது டெக்னலாஜிகள் கிரிக்கெட் உலகில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 

இன்ஜினியரிங் படித்த இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பாப் வூல்மர் உதவியுடன் 1996-ஆம் ஆண்டு இந்திய அணியின் செயல்பாடுகளை ஆராய ஒரு சாப்ட்வேர் அறிமுகப்படுத்த உதவினார். விளையாடும்போதே அவ்வப்போது புது புது டெக்னலாஜிகள் பயிற்சி முகாமில் கொண்டு வர உதவினார்.

 

new technologies in cricket coaching

 

 

2016-ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளேவை கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான லக்ஷ்மன், சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் தேர்வு செய்தனர். கும்ப்ளே பயிற்சியாளராக பொறுப்பேற்ற  பின்பு  இந்திய  அணி  பயிற்சி முகாமில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். புது டெக்னாலஜியின் பயன்பாடுகள் அதிகரித்தன. 

இந்திய அணியும் அவரின் பயிற்சியின்போது பல்வேறு  சாதனைகள்  படைத்தது. அவர் பயிற்சியாளராக இருந்த ஐந்து  டெஸ்ட்  தொடர்களிலும் வென்றது. டெஸ்ட் போட்டிகளில் 71% வெற்றியை கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி பெற்றுள்ளது. 

அணியில் வீரர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட சில விஷயங்களில் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவிற்கும், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. கும்ப்ளேவின் கோச்சிங் ஸ்டைல் பற்றி அதிருப்தி நிலவுவதாக கோலி பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்திருந்தார். ஆனால் கும்ப்ளே விலகியது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு இருந்தார். கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி எட்டமுடியாத உயரத்தை அடைந்தது. 

இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே தொடர்ந்து செயல்பட்டு இருந்தால் தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் டேட்டா சைன்ஸ் போன்ற பல புது டெக்னாலஜிகள் இந்திய கிரிக்கெட்டில் முன்கூட்டியே பயன்படுத்தப்பட்டு வீரர்களை இன்னும் மேம்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம். 

சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பிறகு கும்ப்ளே பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என விலகியதை அடுத்த பயிற்சியாளருக்கான நேர்முகத் தேர்வின்போது ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கங்குலி கலந்து கொள்ளவில்லை.

கும்ப்ளே பயிற்சியாளராக இந்திய அணிக்கு தொடராதது இந்திய அணிக்கு பேரிழப்பு. அவரை பயிற்சியாளராக மட்டும் அல்ல; புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தும் ஒரு இன்ஜினியராகவும் இந்திய அணி மிஸ் செய்துள்ளது. 

 

 

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.