Nepal team fixed the bench mark! Cricket fans are amazed

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்றுவருகிறது. கடந்த 23ம் தேதி துவங்கிய இந்தப் போட்டி வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் நடத்தும் இந்த போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில் இந்தியா இதுவரை மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதில், பெண்கள் கிரிக்கெட் போட்டியில் ஏற்கனவே இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் இலங்கையைஎதிர்கொண்டு வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

Advertisment

இந்நிலையில், ஆசியப் போட்டியில் ஆண்கள் டி.20 கிரிக்கெட் போட்டி ஹாங்சோ நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில் இன்று, மங்கோலியா - நேபாளம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கில் இறங்கிய நேபாளம் அணியின் துவக்க வீரர்களான குஷல் புர்டேல், ஆசிஃப் சேக் ஆகியோர் முறையே 19 மற்றும் 16 ரன்களில் வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களத்திற்கு வந்த குஷல் மல்லா மற்றும் திபேந்திர சிங் ஐரி ஆகிய இருவரும் மங்கோலியா அணியை தனது சிக்ஸர்களாலும், பவுண்டரிகளாலும் புரட்டி எடுத்தனர்.

Advertisment

குஷல் மல்லா, பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் தூக்கி அடித்து 34 பந்துகளில் 100 ரன்களை கடந்து அசத்தினார். இவர் 50 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

குஷல் மல்லா மலைக்க வைக்க, திபேந்திர சிங் ஐரி 9 பந்துகளிலேயே 8 சிக்ஸர்கள் அடித்து அரை சதத்தை கடந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்து அசத்தினார். இதில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களையும் அவர் அடித்தார். இவர்களின் வானவேடிக்கை ஆட்டத்தால் நேபாளஅணி மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 314 ரன்களை எடுத்து, மங்கோலியா அணிக்கு 315 ரன்களை டார்கெட்டாக ஃபிக்ஸ் செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவந்த மங்கோலியா அணி வீரர்கள் துவக்கம் முதலே நேபாளம் அணிவீரர்களின் பந்துவீச்சில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க அந்த அணி 13.1 ஓவரில் 41 ரன்கள் எடுத்து ஆல்-ஆவுட் ஆனது. இதன் மூலம் நேபாளஅணி 273 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் நேபாளஅணி பல சாதனைகளைப் புரிந்துள்ளது. அதன்படி314 ரன்கள் குவித்தநேபாள அணி, டி.20 போட்டியில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர்என வரலாறு படைத்துள்ளது.

2007ல் நடந்த டி.20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வீரர் யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை அடித்து 12 பந்துகளில் அரை சதம் விளாசியிருந்தார். இந்தச் சாதனையை முறியடித்த நேபாளவீரர் தீபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

273 ரன்கள் வித்தியாசத்தில் மங்கோலியா அணியை வீழ்த்தி டி.20 போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையையும் படைத்து நேபாளஅணிமுத்திரை பதித்துள்ளது.