ADVERTISEMENT

'ஒலிம்பிக் தகுதி சுற்றில் மேட்ச் ஃபிக்சிங் செய்ய சொன்னார்' - பயிற்சியாளர் மீது இந்திய வீராங்கனை அதிர்ச்சி புகார்!

12:36 PM Sep 04, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றவர் மாணிகா பத்ரா. ஒலிம்பிக் போட்டிகளின்போது இந்திய அணிக்கான பயிற்சியாளரைப் புறக்கணித்தார். போட்டியில் விளையாடியபோது அணியின் பயிற்சியாளரிடமிருந்து எந்த அறிவுரையையும் பெறவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியது.

தனது தனிப்பட்ட பயிற்சியாளரை போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்ததற்காவே, அவர் தேசிய அணியின் பயிற்சியாளரைப் புறக்கணித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து இதுதொடர்பாக விளக்கம் கேட்டு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு மாணிகா பத்ராவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், டென்னிஸ் கூட்டமைப்பின் நோட்டீஸுக்குப் பதிலளித்துள்ள மாணிகா பத்ரா, தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியை, தனது மாணவி சுதீர்த்தா முகர்ஜிக்கு விட்டுத்தருமாறு தேசிய அணியின் பயிற்சியாளர் சௌமியாதீப் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதனாலேயே அவரிடம் பயிற்சி பெறுவதைப் புறக்கணித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை போட்டியை விட்டுத்தர கூறியது தொடர்பாக இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பிடம் புகாரளித்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாணிகா பத்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து மாணிகா பத்ராவின் குற்றச்சாட்டு குறித்து தேசிய அணி பயிற்சியாளர் சௌமியாதீப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் கூடவிருக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என அந்த கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT