ADVERTISEMENT

மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர்

12:08 PM Sep 21, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை 2023 இன் இறுதிப் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதனால், ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 30 தொடங்கி நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை கடந்த ஞாயிறு விளையாடியது. இதில் இந்தியா, இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இப்போட்டியில் சிறப்பாக விளையாடி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். முகமது சிராஜ் 2023 ஜனவரியில் ஐசிசி பட்டியலில் முதலிடம் வகித்திருந்தார். ஆனால், ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மார்ச் மாதத்தில் சிராஜை முந்தி முதலிடத்தைக் கைப்பற்றினார். பின்னர், சிராஜ் ஒன்பதாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில்தான் சிராஜ் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனால் சிராஜ் 8 இடங்கள் முன்னேறி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், " மீண்டும் ஐசிசி ஒருநாள் போட்டி பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த, சிராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்" என போஸ்டருடன் பதிவிட்டது.

முகமது சிராஜ் ஐசிசி பட்டியலில் முன்னேறி ஜோஷ் ஹேசில்வுட்டை பின்னுக்கு தள்ளியுள்ளார். மறுபுறம். இந்திய ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ் மூன்றாம் இடத்தில் இருந்து 9ம் இடத்திற்கு சரிந்துள்ளார். ஆனால், இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜாஸ்பிர்த் பும்ரா இரண்டு இடங்கள் முன்னேறி 27வது இடம் பிடித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT