Skip to main content

ஃபுட்பாலால் வந்த நிலநடுக்கம் !

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
mexico

 

 

 

உலகிலேயே அதிக விசிறிகளை கொண்ட விளையாட்டு, அதிகப்படியான பார்வையாளர்கள் பார்க்கும் விளையாட்டு என்று பலதரப்புகளில் தன் காலைப் பதித்திருக்கும் கால்பந்து, இந்தியாவை பொறுத்தமட்டில் டம்மி பீஸாகத்தான் இருக்கிறது. கிரிக்கெட் மட்டுமே உலகம் என்று கருதுபவர்கள், மற்றவர்கள் ஏன் இந்த விளையாட்டை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று புரியாமலேயே இருக்கிறார்கள். இந்தியாவில் அதிலும் குறிப்பாக சினிமா மக்கள் மத்தியில் எவ்வளவு வெறித்தனமாக உபசரிக்கப்படுகிறதோ அப்படியே கால்பந்தாட்டத்தை ரசிக்கும் கூட்டத்தையும் வைத்துக்கொள்ளலாம். ரஜினி, கமலுக்கு ஒரு காலகட்டத்தில் கட்டவுட், பாலாபிஷேகம் போன்றவை ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்று இருந்தது. இவர்களுக்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி இருந்தது. தற்போது வரையிலும் இந்த வழக்கம் உள்ளது, அதேபோலத்தான் கால்பந்தும். கால்பந்தைக் கொண்டாடப்படும் நாடுகளில், தலைசிறந்த வீரரை கடவுள் போல்தான் பார்ப்பார்கள். தங்களின் வெற்றியை அரக்கர்கள் போல கொண்டாடுவார்கள். தோல்வியை ஜீரணிக்க முடியாதவர்கள் மைதானத்திலிருந்து நகரம் வரை கலவரத்தையே நடத்துவார்கள். அவ்வளவு உணர்ச்சிகரமானது கால்பந்து.

 

mexico fans

 

 

 

நேற்று ஞாயிற்று கிழமை க்ரூப் சுற்றின் நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய நேரப்படி, இரவு 7:30 மணிக்கு நடப்பு சாம்பியனான ஜெர்மனியும், வளர்ந்துவரும் மெக்சிகோ அணியும் மோதின. ஜெர்மனியில் அனைவரும் ஸ்டார் வீரர்களாக இருந்தனர். மெக்சிகோவை சின்னப் பிள்ளையை அணுகுவது போலதான் அணுகுவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால், திரைக்கதையோ முற்றிலும் வேறுமாதிரியாக, டிவிஸ்ட் ஆனது. மெக்சிகோ ரசிகர்கள் ஆரவாரம் செய்ய சுறுசுறுப்பாக ஆரம்பித்தனர். ஜெர்மனி ஒரு நடப்பு சாம்பியன் என்பதை மறந்து ஆடியதா, இல்லை மெக்சிகோவின் ஆட்டதினால் பார்ப்பவார்களுக்கு அவ்வாறு தெரிந்ததா என்று குழப்பமாகவே இருந்தது. முப்பத்தி ஐந்தாவது நிமிடத்திலேயே மெக்சிகோவின் இளம் வீரர் ஹிர்விங் லோவான்சா கோல் அடித்தார். இது ஜெர்மனி வீரர்களின் மனதிலும், மைதானத்தில் பார்க்கும் ரசிகர்களின் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த அதிர்வலைகளைத் தாண்டி, மெக்சிகோ நகரத்தில் இந்த கோலை கோலாகலமாக கொண்டாடி குதித்து ஆடி கொண்டாடினர். இதனால் அங்கு நிலநடுக்கம் உருவாகும் அளவுக்கு அதிர்வுகள் ஏற்பட்டன. மெக்சிகோவைச் சேர்ந்த சீஸ்மிக் என்னும் கண்காணிப்பு வலைதளம். பார்வையாளர்களின் மாஸ் ஜம்பினால் இந்த செயற்கையான நிலநடுக்கம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜெர்மனி என்னும் மாபெரும் அணியை சாதாரண அணி அதிரடியாக விளையாடி துவம்சம் செய்வது என்றால் சாதாரணமான விஷயமா என்ன? அதுவும் மெக்சிகோவுக்கு, ஜெர்மனியுடன் இது முதல் வெற்றி. வெறிபிடித்தவர்களை போல குதித்து தங்கள் நாட்டின் வெற்றியை கொண்டாடி பூமியை கால்பந்தாடியுள்ளனர் ரசிகர்கள். இதேபோல பெரு அணி தகுதிச் சுற்றில் நியூசிலாந்து அணியுடன் முதல் கோலை அடித்து 1982 ஆம் ஆண்டுக்குப்பின் உலகக்கோப்பைக்குள் நுழைய காத்திருந்தது. அந்த கொண்டாட்டமும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் இதுபோன்ற சாதாரண அணிகள், பலம் வாய்ந்த மற்றும் உலகின் சிறந்த அணிகளுடன் மோதி வெற்றியடைந்தால் அது எந்தமாதிரியான முடிவைக் கொண்டுவருமோ.... கால்பந்தாட்டம் உண்மையில் ஒரு வெறியாட்டம்தான் போல...