/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2_209.jpg)
தோனியின் மெசேஜ் தான் என்னை ஆசுவாசப்படுத்தியது என விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்றுவித போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டுள்ளார். ஆனால், இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் விராட் தலைமையிலான இந்திய அணி செயல்பட்ட விதத்திற்கும் ஐசிசி தொடர்களில் இந்திய அணி செயல்பட்ட விதத்திற்கும் வேறுபாடுகள் இருப்பதாகவும் ஐசிசி போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பின் அணியில் வீரராக தொடர்கிறார். ஆனாலும் கடந்த ஆண்டு விராட் கோலியின் கிரிக்கெட் செயல்பாடுகள் மெச்சும் படியாக இல்லை. அதிக ரன்களை குவிக்காமல் தொடர்ந்து அவுட்டாகி வந்தார். இந்த வேளையில் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானார்.
இந்நிலையில் தான் கேப்டனாகவும் பார்மில் இல்லாத நிலையில் தனது மனநிலை குறித்தும் பேசியுள்ளார். ஆர்.சி.பி. அணியின் பாட்காஸ்ட்டில் பேசிய விராட் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “ஒவ்வொரு தொடரிலும் விளையாடுவதற்கு காரணம், அதனை வெல்ல வேண்டும் என்ற என்பதற்காகத்தான். 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை, 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போன்ற தொடர்களில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இருக்கிறேன். இதில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளோம். ஆனால் நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என என்மீது முத்திரை குத்தப்படுகிறது.
நான் என் கிரிக்கெட் பயணத்தில் கடினமாக உணர்ந்த காலகட்டத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தவர் அனுஷ்கா. அவர் அந்த கடினமான காலகட்டத்தில் என்னுடன் இருந்தார். இக்காலகட்டத்தில் எனக்கு உதவியாக இருந்த எனது பயிற்சியாளர், எனது குடும்பத்தினர்களைத்தாண்டி மனநிலை மனிதரை எப்படி பாதிக்கும் என்பதை உணர்ந்து என்னை தொடர்பு கொண்டவர் தோனி மட்டுமே.
தோனி என்னைத்தொடர்பு கொண்டது குறித்து நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன். தோனியை அவ்வளவு சீக்கிரம் தொடர்புகொண்டுவிட முடியாது. அவரை தொடர்பு கொண்டால் 99 சதவீதம் அவர் அதை எடுக்க மாட்டார். ஏனென்றால் அவர் தனது கைபேசியை பார்ப்பதே அரிது. ஆனால் அவர் என்னை இருமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஒரு முறை அவர் எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அதில், "நீங்கள் வலிமையானவராக இருக்கும் போதும். வலிமையானவர் என்று பிறரால் அறியப்படும்போதும் உங்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கக்கூட எல்லோரும் மறந்துவிடுவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். தோனியின் அந்த குறுஞ்செய்தி என்னை ஆசுவாசப்படுத்தி அமைதிப்படுத்தியது” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)