Skip to main content

விசித்திரமான முறையில் வீழ்ந்த மேத்யூஸ்! வங்கதேசத்திடம் தோற்ற இலங்கை!

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Mathews falls in a strange way! Sri Lanka lost to Bangladesh!

 

உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கை அணியின் மேத்யூஸ் புதிய முறையில் ஆட்டமிழந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

உலகக் கோப்பை 2023ன் 38 ஆவது லீக் ஆட்டம் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இன்று (06.11.2023) நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. குசால் பெரேரா 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மெண்டிஸும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரு விக்கெட்டுகள் விழுந்தாலும் நிஷங்கா ஓரளவு அதிரடி காட்டினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சமரவிக்ரமா ஓரளவு நிலைத்து நின்றார். அவருக்கு கை கொடுத்த அசலங்கா சிறப்பாக ஆடினார். இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும்போது, சமரவிக்ரமா 41 ரன்களுக்கு வெளியேறினார்.

 

அணியின் ஸ்கோர் 135-4 என்று இருந்தது. அப்போது தான் கிரிக்கெட் வரலாற்றில் அந்த அரிய நிகழ்வு நடந்தது. ஒரு வீரர் ஆட்டமிழந்து சென்ற 2 நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் களத்திற்குள் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது விதி. அதற்கு மேல் தாமதமானால் எதிரணி கேப்டன் அப்பீல் செய்து அந்த புதிய வீரரை பேட்டிங் செய்யாமலேயே ஆட்டமிழக்க செய்யலாம். அந்த அணியின் அனுபவ வீரர் மேத்யூஸ் களம் இறங்கி விட்டார். ஆனால் சரியான ஹெல்மெட் எடுத்து வராததால், வேறு ஹெல்மெட்டை எடுத்து வரச் சொல்லி பெவிலியனை நோக்கி கையசைத்தார். இதில் 3 நிமிடங்கள் ஆகிவிட்டது. இதனால் எதிரணி கேப்டன் ஷகிப் அவுட் என அப்பீல் கோரினார். ஆலோசித்த அம்பயர்கள் அவுட் என அறிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் விளையாடாமலேயே அவுட்டாகி வெளியேறினார். உலக கிரிக்கெட்டில் இந்த விதி இருந்தாலும் இதுவரை பயன்படுத்தப்பட்டது கிடையாது. எனவே மேத்யூஸ் இந்த முறையில் அவுட் ஆன முதல் வீரரானார்.

 

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் டி சில்வா 34, தீக்‌ஷனா 22 என வீழ்ந்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் அசலங்கா சதமடித்தார். அவரின் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் டன்சிம் 3 விக்கெட்டுகளும், ஷகிப் மற்றும் இஸ்லாம் 2 விக்கெட்டுகளும், மிராஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசன் 9 ரன்னிலும், லிட்டன் தாஸ் 23 ரன்களிலும் வெளியேறினர். பிறகு இணைந்த ஷாண்டோ, ஷகிப் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. பொறுமையுடன் ஆடிய இருவரும் சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாண்டோ 90 ரன்களில் ஆட்டமிழந்தார், ஷகிப் 82 ரன்களில் மேத்யூஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது மேத்யூஸ் நேரத்தைக் காட்டுவது போல் சைகை காட்டிய தருணம் சுவாரசியமாக அமைந்தது. இருப்பினும் பின்வரிசை வீரர்கள் உதவியுடன் வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வங்கதேச அணி கேப்டன் ஷகிப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் இலங்கை அணி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் மேத்யூஸ் ஆட்டமிழந்தது அணியின் தோல்வியில் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதால், அனுபவ வீரர் சிறுபிள்ளை போல நடந்து கொள்ளக் கூடாது என்று சரியான ஹெல்மெட் எடுத்து வராதது பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும், வங்கதேச அணி கேப்டன் ஷகிப்பின் செயல் ஜென்டில்மேன் விளையாட்டுக்கு அழகல்ல என்று ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

- வெ.அருண்குமார்