இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்தார். தற்போது இதே போல ஒரு சாதனையை நியூஸிலாந்து இளம் வீரர் லியோ கார்டர் படைத்துள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடரில் நேற்றைய போட்டியில், கேண்டர்புரி மற்றும் நார்தெர்ன் நைட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த நார்தெர்ன் நைட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களை குவித்தது. 20 ஓவர்களில் 220 என்ற கடின இலக்குடன் விளையாட தொடங்கிய கேண்டர்புரி அணி, வெற்றிக்கு திணறிக்கொண்டிருந்தது. அப்போது ஆண்டன் டெவிசிக் வீசிய 16ஆவது ஓவரை எதிர்கொண்ட லியோ கார்டர், ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் 7 பந்துகள் மீதமிருக்கையிலேயே அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய லியோ கார்டர் 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.