இலங்கை அணியின் மூத்த மற்றும் முன்னணி வீரரான மலிங்கா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

Advertisment

lasith malinga farewell match against bangladesh

Advertisment

35 வயதான மலிங்கா தனது வித்தியாசமான பந்துவீசும் ஸ்டைலால் உலக அரங்கில் பிரபலமானவர். வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் நேற்று இலங்கை அணி வங்கதேசஅணியுடன் மோதிய போட்டியே அவருக்கு கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. 315 என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால், சௌம்யா சர்க்கார் ஆகிய இருவரையும் கிளீன் போல்ட் செய்துவெளியே அனுப்பினார் மலிங்கா. பின்னர் சீரான இடைவெளியில் வங்கதேச அணி தனது விக்கெட்டுகளை இழந்து, 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மலிங்கா, 38 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பெருமையுடன் மலிங்கா ஓய்வு பெற்றார். இந்த போட்டிக்கு பிறகு மலிங்காவை தோளில் தூக்கி அந்த அணி வீரர்கள் சுற்றி வந்தனர், மற்றும் அனைத்து வீரர்களும் வரிசையில் நின்று தங்களது பேட்டை தூக்கி அவருக்கு மரியாதையை செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் மைதானம் முழுவதும் மலிங்காவிற்கு நன்றி தெரிவித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மரியாதையை செலுத்தினர்.