Skip to main content

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 11ஆவது சீசன் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, அதன் மீதான எதிர்பார்ப்பானது அதிகரித்தது. இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் நடந்துமுடிந்தது. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஐ.பி.எல். சீசன் தொடக்கத்தில் இருந்து விளையாடி, இரண்டு முறை கோப்பையை வென்ற கேப்டனாகவும் இருந்தவர் கவுதம் காம்பீர். நடந்து முடிந்த ஏலத்தில் கவுதம் காம்பீரை கொல்கத்தா அணியில் எடுக்காததால், அந்த அணியின் கேப்டன் பொறுப்பு வகிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

 

Lynn

 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ் லின் கொல்கத்தா அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரை ரூ.9.6 கோடி கொடுத்து தக்கவைத்துக் கொண்டது கொல்கத்தா அணி. இந்த ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த சீசனின் போது தோள்பட்டைக் காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும், ஏழு போட்டிகளில் 295 ரன்கள் எடுத்திருந்தார் கிறிஸ் லின். அந்த சீசனில் அவரது சராசரி ரன்கள் 49.16; மூன்று அரை சதங்கள் அதில் அடக்கம். ‘மூத்த வீரர்கள் அணியில் இருக்கும்போது எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவது பெரிய விஷயம். கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டால், சிறப்பாக செயல்படக் காத்திருக்கிறேன்’ என கிறிஸ் லின் தெரிவித்துள்ளார். 

Next Story

ஒரு ஆட்டம், இவ்வளவு சாதனைகளா? கலக்கிய கொல்கத்தா அணி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
dc vs kkr record break victory for kolkata

ஐபிஎல் 2024இன் 16ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சால்ட், நரைன் பேட்டிங்கின் அதிரடியால் டெல்லி அணி நிலை குலைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் விண்ணைப் பார்த்தபடியே இருந்தனர் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கொல்கத்தாவின் பேட்டிங்கில் சிக்சர்களும், பவுண்டரிகளும் பறக்கத் தொடங்கின.

2023 இல் நரைன் துவக்க ஆட்டக்காரராக மூன்று போட்டிகளில் களமிறக்கப்பட்டார். ஆனால், மூன்று போட்டிகளிலும் சொதப்ப, அந்த முடிவு கைவிடப்பட்டது. ஆனால், இந்த முறை கம்பிரின் துணிவான முடிவால் மீண்டும் நரைன் மீது நம்பிக்கை வைத்து துவக்க வீரராக களமிறங்க வைத்தார். ஆனால் முதல் போட்டியில் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். இருந்தாலும் மீண்டும் நம்பிக்கை வைத்து அவரையே களமிறக்க முடிவு செய்தார் காம்பிர். அந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

நேற்றைய ஆட்டத்தில் முத்தாய்ப்பாக 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் இமாலய ரன் குவிப்புக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு துணையாக ரகுவன்சி 27 பந்துகளில் 54 ரன்களும், ரசல் 41 ரன்கள், ரிங்குவின் 26 ரன்கள் என அதிரடி கூட்டணியின் அசர வைத்த பேட்டிங்கால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது.

பின்னர், 273 என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்களும், கேப்டன் பண்ட் 25 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ரன்ரேட் தாறுமாறாக எகிறி +2.518 என முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 272 பதிவாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 18 சிக்சர்கள் இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலக டி20 வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் 14 ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் கொல்கத்தா சார்பில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற ரசலை சமன் செய்துள்ளார்.

Next Story

கேப்டனுக்கு மீண்டும் எதிர்ப்பு; எல்லை மீறிய ரசிகர்கள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Rohit fans who crossed the line for Opposition to hardik pandya for Captain

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இரண்டு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. ஐ.பி.எல். 2024 போட்டியில் 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. 

அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களில் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் குறைந்தனர்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்னான அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலே, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் 2024 இன் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.  அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்... ரோஹித்.... ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.