Skip to main content

குஜராத் அணியிலிருந்து 2 வீரர்களை தன் வசப்படுத்திய கொல்கத்தா 

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

Kolkata got 2 players from Gujarat team

 

16 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அணியின் நிர்வாகங்கள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. 

 

இந்நிலையில் குஜராத் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் லோகி ஃபெர்குசன் மற்றும் விக்கெட் கீப்பர் குர்பாஸையும் ட்ரேடிங் முறையில் கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. இத்தகவலை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 

 

ஃபெர்குசன் கடந்த ஐபிஎல் ஏலத்தில் 10 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். கடந்த சீசனில் குஜராத் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மேலும் குஜராத்தால் வாங்கப்படுவதற்கு முன்பு கொல்கத்தா அணிக்காக 2019 முதல் 2021 வரை விளையாடினார். தற்போது மீண்டும் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

 

ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிமுகமான குஜராத் அணி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

மாற்றி எடுத்த வீரர் மாஸ் காட்டிய சுவாரசியம்; ஐபிஎல்-இல் நடந்த ருசிகரம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Shashank Singh batting gt vs pbks match

மாற்றி எடுக்கப்பட்ட வீரரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 17ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹா 11 ரன்னிலே வெளியேறி ஏமாற்றினார். பின்னர் கேப்டன் கில்லுடன் இணைந்த வில்லியம்சன் பொறுமையாக ஆடினார். ஆனால், கேப்டன் கில் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.

வில்லியம்சன் 26 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் வழக்கத்திற்கு மாறாக அவரும் அதிரடியாக ஆடினார். 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மற்றொரு தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர் 8 ரன்களில் வெளியேறினார். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும், மறுபுறம் கேப்டன் கில் அரை சதம் கடந்து 89 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டக்காரர் ராகுல் டெவாட்டியாவின் 23 ரன்கள் உதவியுடன் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளும், ப்ரார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 200 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் தவான் 1 ரன்னிலே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். முக்கிய ஆட்டக்காரரான் பேர்ஸ்டோவும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது அதிரட் காட்டிய பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.பெரிது எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசாவும் 15 ரன்களில் அட்டமிழக்க 111-5 என்று தடுமாறியது.

பஞ்சாப் அணி தோல்வி உறுதி என ரசிகர்கள் நினைத்த வேளையில், சஷாங்க் சிங் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அடுத்து வந்த ஜித்தேஷும் அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால், அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஜித்தேஷ் 16 ரன்களில் வெளியேறினார். பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்ட சஷாங்க் சிங் அரை சதம் கடந்தார். பின்னர் வந்த அஷுட்டோஷ் ஷர்மாவும தன் பங்குக்கு அதிரடியில் இறங்கினார். அஷுட்டோஷ் ஷர்மா 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆக, இறுதி வரை ஆட்டமிழக்கமாமல் நின்ற சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை அபார வெற்றி பெற செய்தார்.

இந்த சஷாங்க் சிங் பஞ்சாப் அணிக்குள் வந்த நிகழ்வு சுவாரசியமானது. ஐபில்2024 மினி ஏலத்தின் போது பஞ்சாப் அணி சஷாங்க் சிங் என்ற வீரரை எடுக்க முன்பே திட்டமிட்டு, அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால், 19 வயது சஷாங்க் சிங்கை எடுப்பதற்கு பதிலாக 32 வயதான சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்து விட்டது.

தற்போது அந்த சஷாங்க் சிங் தான், தனது அதிரடியால் பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தி வெற்றி தேடித் தந்துள்ளார். குஜராத் அணி தரப்பில் நூர் அஹமத் 2 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா, உமேஷ், ரஷித், மொஹித், தர்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக சஷாங்க் சிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.