ADVERTISEMENT

50 ரன்களில் கோலிக்கு காத்திருக்கும் சாதனை; இன்றைய போட்டியின் முழு அலசல்!

03:03 PM Apr 17, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

16 ஆவது ஐபிஎல் சீசனின் 24 ஆவது லீக் போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. சென்னை பெங்களூரு அணிகள் மோதும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 6 மற்றும் 7 என அடுத்தடுத்த இடங்களில் இருப்பதால் இரு அணிகளும் வெற்றி பெறக் கடுமையாகப் போராடும். சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா இன்றைய போட்டியில் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கோலி மற்றும் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக ஜடேஜாவின் ரெக்கார்டு சிறப்பான ஒன்றாகவே உள்ளது. எனவே ஆட்டம் மிடில் ஓவர்களில் தீர்மானிக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை அணியில் வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களின் கை ஓங்கியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சுழற்பந்து வீச்சாளர்கள் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். அதற்கு தகுந்தவாறு பெங்களூர் அணியும் நடப்பு ஐபிஎல் தொடரில் 14 விக்கெட்களை சுழலுக்கு எதிராக விட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் சென்னை அணியும் வேகப்பந்து வீச்சுடன் பெங்களூர் அணியை ஒப்பிடும்போது அந்த அணி பல மடங்கு முன்னால் உள்ளது. பவர் ப்ளே நாயகனாக முகமது சிராஜ் அந்த அணியில் ஜொலிக்கிறார். இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக திணறும் கான்வேக்கு சிராஜ் தொல்லைகள் கொடுக்கலாம். மறுபுறம் இதுவரை சிராஜின் 36 பந்துகளை எதிர்கொண்டுள்ள ருதுராஜ் இதுவரை அவரால் அவுட் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியில் வேகப்பந்து வீச்சு சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதால் பவர் ப்ளே ஓவரில் விராட் மற்றும் டுப்ளசிஸ் ஜோடி ரன்களைக் குவிக்கலாம். ஏனெனில் விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை வேகப்பந்து வீச்சாளரால் அவுட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி 979 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 1029 ரன்களுடன் ஷிகர் தவான் உள்ளார். இன்றைய போட்டியில் 51 ரன்களை எடுக்கும் பட்சத்தில் அவர் முதல் இடத்திற்கு முன்னேறுவார்.

சென்னை அணியின் பேட்டிங்கில் தோனி மற்றும் ரஹானே சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ஆடிய அனுபவம் உள்ளவர்கள். 2012 ஆம் ஆண்டு ரஹானே தொடர்ச்சியாக 6 பந்துகளையும் பவுண்டரிகளாக மாற்றியது இந்த மைதானத்தில் தான். கேப்டன் தோனியும் சின்னசாமி மைதானத்தில் நடந்த கடைசி 10 போட்டியில் 92.60 ரன்கள் சராசரியுடன் 180.86 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார்.

இரு அணிகளும் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 19 முறையும் பெங்களூர் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. சென்னை அணிக்கு எதிராக பெங்களூர் அணி 205 ரன்களையும் குறைந்த பட்சமாக 70 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேபோல் பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை அணி அதிகபட்சமாக 216 ரன்களையும் குறைந்த பட்சமாக 86 ரன்களையும் எடுத்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT