/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virat-kohli-100.jpg)
உலகக் கோப்பை 2023ன் 37 ஆவது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய ரோஹித், கில் இணை அதிரடியுடன் தொடங்கியது. ரோஹித் 264 அடித்த ஈடன் கார்டன் மைதானம் என்பதால், பவுண்டரிகளும், சிக்ஸர்களும் மட்டுமே அடிப்பேன் என்று முடிவு எடுத்து பந்தை எல்லைக் கோட்டிற்கு விரட்டி, மிரட்டும் வண்ணம் ஆடினார். இதனால் தென் ஆப்பிரிக்க பவுலர்களும், பீல்டர்களும் செய்வதறியாது திகைத்தனர். ரோஹித் அதிரடி மூலம் இந்திய அணி 5 ஓவர்களுக்குள்ளேயே 50 ரன்களைக் கடந்தது. பவுண்டரி அடிக்க முற்பட்டு ரோஹித் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கோலியுடன் இணைந்த கில் நிதானமாக ஆடினார். 23 ரன்களில் கில்லும் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் மற்றும் கோலி இணை மிகவும் பொறுமை காட்டியது. 14 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. கோலி மற்றும் ஷ்ரேயாஸ் என இருவரும் அரை சதம் கடந்தனர். அரை சதம் கடந்தவுடன் கியரை மாற்றிய ஷ்ரேயாஸ் அதிரடியாக ஆடத் தொடங்கினார். சிறிது நேரத்திலேயே 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுலும் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யா 360 டிகிரியில் ஆடத் தொடங்கினார். ஆனால் கடந்த ஆட்டத்தைப் போலவே க்லெளவில் பட்டு கேட்ச் ஆனார். 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர ஓரளவு உதவினார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் கோலி தன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தான் ஏன் இன்னும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். சிறப்பாக ஆடிய கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 ஆவது சதத்தைக் கடந்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த மாஸ்டர் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். கோலியின் 35 ஆவது பிறந்த நாளான இன்று இந்த சதம் அடிக்கப்பட்டது கூடுதல் சிறப்பாகும்.இறுதியில் ஜடேஜாவின் அதிரடியான 29 ரன்கள் உதவியுடன், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்துள்ளது.தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இங்கிடி, ஜான்சென், மஹராஜ், ஷம்சி, ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்க உள்ளது.
- வெ.அருண்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)