Skip to main content

அன்று வில்லன்... இன்று மறைமுக ஹீரோ... தடுமாற்றம் டூ தடுப்பாட்டம்...

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

எதிரணிக்கான ஒரு இலவச விக்கெட், 10 வீரர்கள் மட்டுமே கொண்ட இந்திய அணி என 2018-ஆம் ஆண்டு பல விதமான மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானார் கே.எல்.ராகுல். மேலும் ஆஸ்திரேலியா தொடரில் மிக மோசமாக விளையாடியதால் கே.எல். ராகுலுக்கு விமான டிக்கெட் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று ராகுல் மீது அதிக நம்பிக்கை கொண்ட கவாஸ்கரே கருத்து தெரிவித்தார். 

 

kl rahul in indian cricket team

 

 

2014-ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான கே.எல்.ராகுல் முதல் இரண்டு வருடங்கள் சுமாராகவே விளையாடி வந்தார். தடுமாறி வந்த ராகுலுக்கு 2016-ஆம் ஆண்டு ஒரு பெரிய நம்பிக்கையும், கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியது 2016-ஆம் ஆண்டு ஐபிஎல். அந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித போட்டிகளிலும் கலக்கினார்.  

2016-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 இன்னிங்ஸ்களில் 397 ரன்கள், சராசரி 44.11, ஸ்ட்ரைக் ரேட் 146.49 என பெங்களூர் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார். அதற்கு பிறகு நடந்த ஜிம்பாப்வே தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதம் என 196 ரன்கள், சராசரி 196.00, ஸ்ட்ரைக் ரேட் 83.40 என அறிமுக ஒருநாள் தொடரிலேயே அசத்தினார்.  

அதே போல 2016-ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் 4 இன்னிங்ஸ்களில் 179 ரன்கள், சராசரி 89.50, ஸ்ட்ரைக் ரேட் 159.82, அதிகபட்சமாக 110* ரன்கள் எடுத்து இந்தியா அணியில் முக்கிய வீரராக உருவெடுத்தார். நல்ல ஃபார்மில் இருந்த ராகுல் 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை. அப்போது ஒரு நாள் போட்டிகளில் சரியான ஃபார்ம் இல்லாமல் 6 இன்னிங்ஸ்களில் 52 ரன்கள், சராசரி 8.67, ஸ்ட்ரைக் ரேட் 72.22.

2018- ஆம் ஆண்டு அவருக்கு தொடர் சோதனைகளை கொடுத்தது. இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ராகுலின் பேட்டிங் சராசரி 29.90. இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் சராசரி 18.50. ஆஸ்திரேலியா தொடரில் பேட்டிங் சராசரி 11.40. இதனால் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் ராகுலின் ஃபார்ம் குறித்து பல விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

அதிரடிக்கு பெயர்போன ராகுல் அதற்கு பிறகு நிதானமாக ஆட தொடங்கினார். தனது ஆட்டபாணியை சிறிது மாற்றினார். களத்தில் இறங்கியவுடன் அதிரடியாக விளையாடும் ராகுல், அந்த மோசமான பார்மிற்கு பிறகு தடுப்பாட்டத்தை கையில் எடுத்தார். ரிஸ்க்கான ஷாட்களையும், தேவையில்லாத ஷாட்களையும் ஆடுவதை தவிர்க்க தொடங்கினார். விக்கெட்டை விடாமலும், ரன்களை குறைவான வேகத்திலும் எடுத்து, பிறகு அதிரடி என ஆட்டபாணியை மாற்றிக்கொண்டார். 

இது இந்த வருட ஐபிஎல் தொடரிலும் இந்த ஆட்டபாணி எதிரொலித்தது. கடந்த ஐபிஎல் தொடரில் 500+ ரன்கள், 50+ சராசரி என கலக்கினார். கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்கு விளையாடிய ராகுல் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டபோது மீண்டும் பல விமர்சனங்கள் குவிந்தன. வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது ராகுல் அடித்த சதம் அவரின் உலகக்கோப்பை இடத்தை உறுதி செய்தது.

2-வது விக்கெட்டிற்கு களமிறங்கிய 2 போட்டிகளிலும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார். யார் 4-வது பேட்ஸ்மேன் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தவானுக்கு ஏற்பட்ட காயம் அவரை தொடக்க வீரராக களமிறங்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதிலும் அசத்தினார்.

ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் இந்த தொடரில் குறைவு தான். ஆனால் முதல் 10 ஓவர்களில் விக்கெட்கள் விடாமல் ஆடுவது இங்கிலாந்து மைதானங்களில் மிகவும் அவசியம். அதை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். ரோஹித், கோலிக்கு தேவையான விதத்திலும், சூழ்நிலைக்கு ஏற்பவும் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொண்டார் ராகுல். 1 போட்டியை தவிர, மற்ற போட்டிகளில் சிறப்பாக பங்களித்துள்ளார். 

நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 341 பந்துகளை சந்தித்து 249 ரன்கள், சராசரி 41.50, ஸ்ட்ரைக் ரேட் 73.02. இந்திய அணியில் தவானின் இடத்தை நிரப்பமுடியாது என்ற கருத்துக்கு தனது பேட்டிங் மூலம் பதில் அளித்துள்ளார் ராகுல்.அவரது பேட்டிங் சற்று கூடுதல் அதிரடியுடன் இதுபோலவே தொடர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. அன்று தொடர் தடுமாற்றத்தை சந்தித்த ராகுல், இன்று தொடர் தடுப்பாட்டத்தை ஆடி வருகிறார். இந்திய அணியின் வெற்றிகளுக்கு இந்த தொடரில் மறைமுக ஹீரோவாக பங்களித்து வருகிறார் ராகுல்.