Skip to main content

"நல்ல திறமைசாலி" இந்திய இளம் வீரரைப் புகழ்ந்த வில்லியம்சன்!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

Priyam Garg

 

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய இப்போட்டியில், ஹைதராபாத் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது. 

 

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 19 வயதே நிரம்பிய இளம் வீரரான பிரியம் கார்க், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ஹைதராபாத் அணியின் அதிரடி வீரரும், நியூசிலாந்து அணியின் கேப்டனுமான வில்லியம்சனின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

போட்டியின் முடிவில் பிரியம் கார்க் குறித்துப் பேசிய வில்லியம்சன், "பிரியம் கார்க்கிடம் நல்ல திறமை உள்ளது. இந்தத் தொடர் முழுவதும் அவருக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தது. வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது, அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் என்பதை பார்க்கமுடிந்தது. சில அற்புதமான ஷாட்கள் விளையாடுகிறார். எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பார் என்பது உறுதி" எனக் கூறினார்.

 

 

Next Story

கேன் வில்லியம்சன் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Kane Williamson step down as Test captain

 

நியூசிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் நீக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து நியூசிலாந்து அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகுகிறார் என்றும் அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து வில்லியம்சன் கூறியதாவது, “நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்சம். அதில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகப் பணிகளைக் கொண்டது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இந்த முடிவிற்கு இதுதான் சரியான நேரம் என நான் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

நியூசிலாந்து அணியின் கேப்டனாக 40 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்திய வில்லியம்சன் 22 போட்டிகளில் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். அவரது 24 டெஸ்ட் சதங்களில் 11 சதங்கள் அவர் கேப்டனாக இருந்தபோது அடித்தவை.  

 

நியூசிலாந்து அணி அடுத்து பாகிஸ்தான் உடன் விளையாட உள்ள தொடருக்கு டிம் சௌதி தலைமைத் தாங்குவார் எனவும், துணைக் கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் வீரராக அணியில் தொடர்ந்து செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: காயமில்லை ஆனாலும் விலகிய வில்லியம்சன் - காரணம் என்ன?

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

williamson

 

2021ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டி நடந்து முடிந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நாளை (17.11.2021) தொடங்குகிறது. முதலில் 3 இருபது ஓவர் போட்டிகளில் சந்திக்கும் இரு அணிகளும், அதனைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.

 

இந்தநிலையில், இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராவதற்காக அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, இருபது ஓவர் தொடரில் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் இருபது ஓவர் போட்டி, நாளை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.