Skip to main content

சச்சின் காலில் விழுந்த காம்ப்ளி!!!

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
kambli touches sachin feet!!!




கடந்த வியாழன் அன்று மும்பை டி20 லீக் 2018 க்கான இறுதிப்போட்டி மும்பையில் உள்ள வான்கேடி மைதானத்தில் ட்ரையம்ப் நைட்ஸ் மும்பை நார்த் ஈஸ்ட் அணிக்கும், சிவாஜி பார்க் லயன்ஸ் அணியும் மோதின இந்த ஆட்டத்தில் சிவாஜி பார்க் அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வென்று ட்ரையம்ப் நைட்ஸ் மும்பை நார்த் ஈஸ்ட் அணி பட்டத்தை கைப்பற்றியது.

இந்த ஆட்டம் முடிந்து பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு இரு அணி வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கினர். அப்போது சிவாஜி பார்க் லயன்ஸ் அணியின் ஆலோசகரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியை பதக்கம் பெறவருமாறு அழைத்தபொழுது, நேராக வந்து சச்சின் காலைத்தொட்டு  ஆசிர்வாதம் வாங்கினார் . தனது நீண்டகால நண்பன் தனது காலைத்தொட்டு ஆசிர்வாதம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்த சச்சின் அவரைத்தூக்கி தோளைத்தட்டிக்கொடுத்து அவரிடம் சிரித்துப் பேசினார்.பின்னர் சுனில்கவாஸ்கரிடம் சென்று தனது பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

1988 ஆம் ஆண்டு சச்சினும், காம்ப்ளியும் பள்ளி அளவிலான போட்டியில் ஜோடி சேர்ந்து 664 ரன்கள் குவித்து கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்தனர். அப்பொழுது சச்சினை விட காம்ப்ளி சிறந்த வீரராக கருதப்பட்டார்.

Next Story

ஏன் ரோஹித் வேண்டாம்...? மும்பை இந்தியன்ஸ் முடிவு குறித்து கவாஸ்கர்!

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Why don't Rohit sharma...? Mumbai Indians Gavaskar on the result!

ஐபிஎல் - 2024 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் வாங்கியிருந்த நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து விடுவித்து ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது

அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம்,  ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. 

இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் சமீபத்திய செயல்பாடுகள் குறைந்திருப்பதாலேயே அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “இந்த விவகாரத்தில் எது சரி? எது தவறு? என்று எதையும் நாம் ஆராய வேண்டாம். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அணியின் நலனுக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பவர். ஆனால், ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு குறிப்பாக பேட்டிங்கில் கூட சற்று குறைந்துவிட்டது.  அவர் முன்பு அணிக்கு பேட்டிங் மூலம் அதிக ரன்களை குவித்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அது குறைந்துவிட்டது.

அதன் காரணமாகத்தான் கடந்த 3 வருடத்தில் மும்பை அணி 9வது, 10வது இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் போராடி பிளே ஆஃப் வரை மட்டுமே சென்றது. ஆனாலும், அந்த அணி வீரர்களிடம் முன்பு இருந்து உற்சாகத்தை தற்போது பார்க்கவில்லை. ரோஹித் சர்மா இந்திய அணிக்கும், ஐபிஎல் தொடரிலும் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தொடர்ச்சியாக விளையாடியதால் சற்று களைப்படைந்திருக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அவர் ஒரு இளம் வீரர். 

அத்துடன் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டு முறை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறார். முதல் வருடம் கோப்பையை வென்ற பாண்ட்யா அடுத்த 2வது வருடமும் இறுதி போட்டி வரை அழைத்து சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார்.  அதனால் தான், அவரை கேப்டனாக நியமித்து இருக்கிறார்கள். தற்போது மும்பை அணிக்கு புதுமையாக சிந்திக்க கூடிய ஒருவர் தேவைப்படுகிறது. அதனை அவரால் கொண்டு வர முடியும். எனவே, இந்த முடிவை அந்த அணியின் நிர்வாகம் எடுத்திருக்கிறது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி பலன் அடையுமே தவிர பாதகமாக இருக்காது என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர்.