Skip to main content

வார்னருக்கு அச்சுறுத்தலாக மாறும் ஆர்ச்சர்! 

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

Jofra Archer

 

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான வார்னருக்கு, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் அச்சுறுத்தல் தரக்கூடிய வீரராக உருவெடுத்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணியை வழிநடத்தி வருகிறார். இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர், ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நேற்றைய போட்டியில், ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில், ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் விக்கெட்டினை ஆர்ச்சர் வீழ்த்தினார். 

 

அதிரடியாக விளையாடி ரன் குவிக்கக் கூடியவரான டேவிட் வார்னர், ஆர்ச்சர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து தடுமாறி வருகிறார். சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில், கடைசியாக 7 முறை ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொண்டதில், 6 முறை அவரிடம் தன் விக்கெட்டினை வார்னர் பறிகொடுத்துள்ளார். ஆர்ச்சர் மற்றும் வார்னருக்கு இடையேயான மோதல், மெக்ராத் - சச்சின், ஆண்டர்சன்- காலீஸ் ஜோடிகளுக்கு இடையேயான மோதல் போல கிரிக்கெட் வரலாற்றில் உருவெடுக்குமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.   

 

 

 

Next Story

எந்த தேதியில் மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்?; இறுதி போட்டி எப்போது? - வெளியான புதிய தகவல்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

ipl 2021

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம், அண்மையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது.

 

இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குமென்றும், அக்டோபர் 15ஆம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

விராட் கோலி உடனான மோதல் குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

Suryakumar Yadav

 

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலிக்கும் தனக்குமிடையே நடந்தது என்ன என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரின் 48-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிலைத்து நின்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி வீரரான சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

 

மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் களத்தில் நிற்கும் போது பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி அவரை சீண்டும் விதமாக நடந்துகொண்டார். இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒருவரிடம், இந்திய அணியின் கேப்டன் இப்படியா நடந்து கொள்வது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

 

இது குறித்து அவர் பேசுகையில், "அது களத்தில் உச்சகட்ட தருணம். எனக்கும் அவருக்கும் இடையே அதற்கு முன்பு எதுவும் நடக்கவில்லை. இந்த விஷயம் எப்படி இவ்வளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் உற்சாகத்துடன் இருப்பதை பார்த்திருக்கிறேன். மும்பை அணிக்கு எதிரான போட்டி மட்டும் விதிவிலக்கல்ல. அது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டி. போட்டிக்குப் பிறகு இயல்பாகத்தான் இருந்தார். நன்றாக விளையாண்டீர்கள் என்று அனைவரிடமும் கூறினார். இது சிறிய தருணம் மட்டும்தான். அந்த சூழ்நிலையில் எதிரணியில் முக்கியமான வீரர் யார் என்பது அவருக்கு தெரியும்" எனக் கூறினார்.