/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/88_45.jpg)
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை வங்கதேசம் வென்று தொடரையும் கைப்பற்றிய நிலையில் இன்று சட்டோகிராமில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சைத்தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின்ஷிகர் தவான் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஜோடி பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தது. நிதானமாக ஆடிய கிஷன் 85 பந்துகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் பின் வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் அடுத்த 18 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் 126 பந்துகளில் 200 ரன்களை அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற இஷான் கிஷன் உலகின் அதிவேக இரட்டை சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
இதற்கு முன் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 138 பந்துகளில் 200 ரன்கள் அடித்ததே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையைத்தனது மட்டையால் இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.
வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார். இதற்கு முன் 1999 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போட்டியில் கங்குலி 183 ரன்களை அடித்தவர் என்பதே சாதனையாக இருந்தது.
மேலும் வங்கதேசத்தில் நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 185 ரன்களை எடுத்திருந்தார்.
இன்றைய ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் உடன் கைகோர்த்து ஆடிய விராட் கோலியும் தனது 44 ஆவது சதத்தை அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 91 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்தவர்கள்சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஸர் படேலின் அதிரடியில் இந்திய அணி 50 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்களை குவித்தது.
தொடர்ந்து ஆட வந்த வங்கதேச அணி 12 ஓவரில் 74 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)