Skip to main content

இந்த சீசனில் நிறையவே ஜெயிச்சுட்டோம்.. தல தோனி கலகல! - ஐ.பி.எல். போட்டி #30

Body

ஐ.பி.எல். சீசன் 11ல் மும்பை அணியின் தோல்விக்கணக்கைத் தொடங்கிவைத்த சென்னை அணியை, சனிக்கிழமை நடந்த போட்டியில் தோற்கடித்து பலிதீர்த்துக் கொண்டது மும்பை அணி. அதேசமயம், பல சீசன்களாக தோல்வியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த டெல்லி அணி, வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் மாபெரும் வெற்றியை பெற்று வேகத்தைக் கூட்டியிருக்கிறது.

இந்த இரண்டு அணிகளும் இன்று புனே மைதானத்தில் இரவு 8 மணிக்கு மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் எதிரெதிர் எல்லைகளில் இருந்தாலும், புத்துயிர் பெற்றிருக்கும் டெல்லி அணி மீது அதிக கவனம் திரும்பியிருக்கிறது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிருத்வி ஷா இணையின் சீரான ஆட்டம், ரன்குவிப்பின் அத்தியாவசியத்தை உணர்த்தியது. மேக்ஸ்வெல் இன்னமும் ஃபார்முக்கு வரவில்லை. பந்துவீச்சில் ட்ரெண்ட் பவுல்ட் பற்றி பிரச்சனையில்லை. லியம் ப்ளங்கெட் மற்றும் ஆவிஸ் கான் போன்றவர்களின் புதிய வரவு, மீண்டுவந்த அமித் மிஷ்ரா என டெல்லி அணி புதுப்பொலிவைப் பெற்றிருக்கிறது.

 

DD

 

என்னதான் பேட்டிங்கில் சரவெடியாக இருந்தாலும், தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறும் பவுலர்கள், கூடவே ரன்களையும் வாரி வழங்கும் நிலைமை சென்னை அணிக்கு ஆபத்தான ஒன்று. இதை தோனியே ஒப்புக்கொண்டும் விட்டார். தீபக் சகார் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். அணியில் சில முக்கிய மாற்றங்கள் நிகழலாம். டேவிட் வில்லி, மார்க் உட் போன்றோர் களமிறக்கப்படலாம். லுங்கி என்கிடியும் அணியில் இணைந்துவிட்டார். சாம் பில்லிங்ஸ் இடத்தில் டூப்ளஸி இறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. 

 

சென்னை மற்றும் டெல்லி கடைசியாக மோதிய 16 போட்டிகளில் சென்னை அணியே 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், போட்டி நடக்கும் புனே மைதானம் டெல்லி அணிக்கு மிகவும் பரிட்சயமானது; அந்த மைதானத்தில் ஐந்தில் மூன்று போட்டிகளில் டெல்லி அணி வெற்றிபெற்றிருக்கிறது. அதேசமயம், டெல்லி அணியை ஹர்பஜன் சிங் இத்தனை காலம் மிரட்டி வந்திருக்கிறார். ஆக, இன்று இரு அணிகளுக்கிடையே வெற்றியை நோக்கி மிகப்பெரிய போட்டி நிலவலாம். 

 

Dhoni

 

மும்பை அணியுடன் தோற்றபிறகு கூலாக வந்த தோனி, ‘இந்த சீசனின் தொடங்கி குறைந்த காலத்தில் நாங்கள் நிறையவே ஜெயித்துவிட்டோம். எனவே, வீரர்களுக்கு தோல்வி அவசியமாகிறது. தோல்வி நிறைய கற்றுத்தரும். வெற்றியை விடவும் அது சுவாரஷ்யமானது’ என சிரித்தமுகத்துடன் பேசினார். தோல்வி எவ்வளவு கற்றுத்தந்திருக்கிறது என்பதை இன்றைய போட்டி காட்டிவிடும்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்