
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நேற்று நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமானது மட்டுமல்லாமல் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய இந்த தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு குழந்தைகள், பெண்கள் என 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எதிர்பாராதவிதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர். பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக தரம்சாலாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் தரம்சாலா உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதனால் வீரர்கள் தரம்சாலவிற்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். அதன் காரணமாகவே வரும் 11 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி தரம்சாலாவில் நடைபெறவிருந்த நிலையில் அதனை பிசிசிஐ அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ -யிடம் இருந்து அதிகார அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் போட்டியை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருக்கிறது.