Skip to main content

ஐ.பி.ல். 2019-ல் 1,003 வீரர்களில் 346 பேர் தேர்வு, இறுதியாகப்போகும் 70 பேர் யார்...?

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

2000-ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் 20 ஓவர் பார்மேட் போன்ற சில புது பார்மேட் போட்டிகள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. இருப்பினும், 2007- ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை மற்றும் 2008-ல் இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டிகளுக்கு பிறகுதான் உலகம் முழுவதும் பிரபலமாகியது டி20 போட்டிகள். 

 

 

ii

 

பெரும்பாலான கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் உள்ளூர் டி20 போட்டிகள் நடைபெற்றாலும், இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்குதான் உலகம் முழுவதும் மவுசு அதிகம். இந்த ஐ.பி.எல். போட்டிகளுக்காக சர்வதேச  தொடர்களின் அட்டவணைகூட சில சமயம் மாற்றி அமைக்கப்படும். அந்த அளவுக்கு உலக கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி இடம் கொண்டுள்ளது ஐ.பி.எல். போட்டிகள்.

 

2008 முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஐ.பி.எல்.-லில் 11 சீசன்கள் முடிந்துள்ளன. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-வது சீசன் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கான ஏலம் நாளை(18.12.2018) நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மதியம் 2.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. 

 

கடந்த வருடம் நடந்த ஐ.பி.ல். ஏலத்தில் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு பெரிய அறிமுகம் இல்லாத சுபுமான் கில், இஷான் கிஷான், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர். அதே சமயம் லசித் மலிங்கா போன்ற அதிக பிரபலமான வீரர்கள் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.ல். போட்டிகளில் நடைபெறும் ஆச்சரியங்களை போலவே ஏலத்திலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. 

 

1,003 வீரர்கள் ஐ.பி.எல். ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பம் செய்த நிலையில், 346 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 227 பேர் இந்திய வீரர்கள். 

 

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்:

ஷிமிரன் ஹெட்மீர்: இந்த முறை அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர். சிறந்த ஹிட்டர் மற்றும் கீப்பர். இந்திய சுற்றுப்பயணம், கரிபியன் பிரிமியர் லீக் தொடர், உள்ளூர் டி20 போட்டிகள் என சமீபத்தில் இவருடைய அதிரடி ஆட்டங்கள் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் கவனத்தையும் ஈர்த்தது. 

 

ஓஷேன் தாமஸ், நிக்கோலா பூரன், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களும் டி20-க்கு ஏற்ற வீரர்கள். இவர்களுடைய ஆதிக்கம் ஐ.பி.எல். ஏலத்தில் இருக்கும்.

 

ஆப்கானிஸ்தான் வீரர்கள்:

ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய்: ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் அடித்து அசத்தியவர். ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் மற்றும் 10 ஓவர் போட்டிகளில் கலக்கியவர். எனவே, இவரும் முன்னணி வீரர் முஹம்மது சசாத்தும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களில் கவனத்தை அதிகம் ஈர்த்தவர்கள். பவுலர் ஜாகிர்கானும் கவனிக்கத்தக்கவர்.  

 

தென் ஆப்பிரிக்கா வீரர்கள்:

ஹார்டஸ் விலோஜென்: சமீபத்தில் நடைபெற்ற 10 ஓவர் போட்டிகள் மற்றும் தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் டி20 போட்டிகளில் தனது ஆல்-ரவுண்டர் செயல்பாடு மூலம் பிரபலம் ஆகியுள்ளார்.
ரீஸா ஹெண்டிரிக்ஸ்: தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் டி20 போட்டிகளில் எட்டு இன்னிங்ஸ்களில் 379 ரன்கள், சராசரி 60, ஸ்ட்ரைக் ரேட் 150. நிறைய அணிகள் எதிர்பார்க்கும் வீரர்.
ஹெய்ன்ரிக் க்ளாசென்: மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் தேவைப்படும் அணிக்கு தகுந்த வீரர். ஸ்பின் பவுலிங்கை விளாசுவதில் வல்லவர்.
காலின் இங்கிராம்: உள்ளூர் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர். மேலும், அனுபவம் வாய்ந்த வீரர்.

 


ஆஸ்திரேலியா வீரர்கள்: 

டி20 ஸ்பெஷலிஸ்ட் டி'ஆர்சி ஷார்ட், தற்போது ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக வலம்வரும் கவாஜா, ஆல்-ரவுண்டர் மோசிஸ் ஹென்ரிக்குஸ் ஆகியோர் அதிக தொகைக்கு செல்லக்கூடிய திறன் படைத்தவர்கள். 

 

ஆடம் ஜம்பா, ஷான் மார்ஸ், பென் லாப்ளின் உள்ளிட்டோரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

 

இந்திய அணி வீரர்கள்: 

அக்சர் படேல், சஹா, ஜெயதேவ் உனட்கட், முஹமது சமி ஆகியோர் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்கள். ராஜ்னிஷ் குர்பானி, ஷிபம் துபே மற்றும் வருன் சக்கரவர்த்தி ஆகிய இளம் உள்ளூர் வீரர்களின் விலை ஆச்சரியத்தை ஏற்படுத்தும். 

 

யுவராஜ் சிங், மனோஜ் திவாரி, இஷாந்த் ஷர்மா, வருன் ஆரோன் ஆகிய முன்னணி இந்திய வீரர்களும் ஏலத்தில் உள்ளனர். மெக்கல்லம், ஸ்டெய்ன், மலிங்கா, மோர்னே மோர்கல் போன்ற சர்வதேச பிரபலங்களும் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் எந்தளவு ஐ.பி.எல். அணிகளின் கவனத்தை பெறுவார்கள் என்பது கேள்விகுறிதான்.

 

சாம் குர்ரான் போன்ற இங்கிலாந்து வீரர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும் அவர்கள் ஐ.பி.எல்.-லின் இறுதிகட்டங்களில் ஐ.பி.எல். போட்டிகளில்  பங்கேற்க மாட்டார்கள் என்பதால் ஐ.பி.எல். அணிகள் இங்கிலாந்து வீரர்களை ஏலத்தில் எடுக்க தயங்கும்.


பிரண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், லசித் மலிங்கா, ஷான் மார்ஷ், காலின் இங்கிராம், கோரி ஆண்டர்சன், ஏஞ்சலோ மேத்யூஸ், சாம் குர்ரான் மற்றும் டி'ஆர்சி ஷார்ட் ஆகியோர் தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இருப்பினும், எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் 2 கோடி ரூபாய்க்கு மேல் அடிப்படை விலை வைக்கவில்லை.

 

இந்திய வீரர்களில் ஜெய்தேவ் உனட்கட் அதிகபட்சமாக 1.5 கோடியை அடிப்படை விலையாக வைத்துள்ளார். யுவராஜ் சிங் மற்றும் அக்சர் படேல், சஹா, முகம்மது சமி ஆகியோர் ரூ. 1 கோடியை அடிப்படை விலையாகவும், இஷாந்த் சர்மா, நமன் ஓஜா 75 லட்சம் ரூபாயை அடிப்படை விலையாகவும், புஜாரா, மனோஜ் திவாரி, ஹனுமா விஹாரி, குர்கீரத் சிங், மோகித் சர்மா ஆகியோர் தங்களது அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாயையும் நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.