IPL 2025 : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

IPL 2025 Royal Challengers Bangalore advance to the final

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று (29.05.2025) இரவு முதல் பிளே ஆப் போட்டி சண்டிகரில் உள்ள எம்.ஒய். சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. இருப்பினும் பஞ்சாப் அணி வீரர்கள் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே பஞ்சாப் அணியினர் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 17 பந்துகளில் 26 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 10 பந்துகளில் 18 ரன்களையும், அஸ்மத்துல்லா ஒமர்சாய் 12 பந்துகளில் 18 ரன்களையும் குவித்தனர். இதனைத் தொடர்ந்து 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின் விராட் கோலி 12 ரன்களிலும், மயங்க அகர்வால் 19 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய பில்சால்ட் 27 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். அதே சமயம் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி எளிதில் விழ்த்தியது. அந்த வகையில் இந்த ஐ.பி.எஸ். தொடரின் முதல் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இன்று (30.05.2025) நடைபெற உள்ள 2 வது பிளே ஆப் போட்டியில் (Elimination) குஜராத் - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி வரும் ஜூன் 1ஆம் தேதி பஞ்சாப் அணியுடன் மோதயுள்ளது. இதில் வெற்றிபெறும் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் ஜூன் 3ஆம் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

cricket FINAL MATCH ipl 2025 royal challengers bengallore
இதையும் படியுங்கள்
Subscribe