Skip to main content

ஐபிஎல் 2022; கேஎல் ராகுல், ரஷித் கானுக்கு ஒருவருடம் தடை? 

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

KL RAHUL AND RASHID KHAN

 

2021ஆம் ஐபிஎல் தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில், 2022 ஐபிஎல்க்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளதால், இந்த மெகா ஏலத்தில் வழக்கத்தைவிட அதிக பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்கிடையே மெகா ஏலத்தையொட்டி, புதிதாக கலந்துகொள்ளும் இரு அணிகளும் ஏலத்திற்கு வரும் வீரர்களில் மூவரை, ஏலத்திற்கு முன்பாகவே வாங்க முடியும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் அணி நிர்வாகம், பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறுமாறு கேஎல் ராகுலை லக்னோ அணி நிர்வாகம் தூண்டுவதாக பிசிசிஐயிடம் புகாரளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அதேபோல் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகமும்,  சன்ரைசர்ஸ் அணியில் இருந்து ரஷித் கானை வெளியேறுமாறு லக்னோ அணி நிர்வாகம் தூண்டுவதாக பிசிசிஐயிடம் புகாரளித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதுதொடர்பாக பிசிசிஐ விசாரித்து வருவதாகவும், இது உண்மையென நிரூபிக்கப்பட்டால் கேஎல் ராகுல், ரஷித் கான் இருவருக்கும் ஐபிஎல்-லில் பங்கேற்க ஒருவருடம் தடை விதிக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் அணியில் இருக்கும்போதே வேறு அணிக்கு மாற பேச்சுவார்த்தை நடத்திய ஜடேஜாவுக்கு ஐபிஎல் தொடரிலிருந்து ஒருவருடம் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

 

Next Story

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.  

 

 

Next Story

‘மும்பைக்கு மரண பயத்தைக் காட்டிய ரஷித்’ - நல்வாய்ப்பாக வென்ற மும்பை

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

'Rashid who showed Mumbai the fear' was a good win for Mumbai

 

16 ஆவது ஐபிஎல் லீக் தொடரின் 57 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்களை எடுத்தது. இது குஜராத் அணிக்கு எதிராக ஒரு அணி பதிவு செய்யும் அதிகபட்ச ஸ்கோராகும். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 103 ரன்களை எடுத்தார். ஐபிஎல் போட்டிகளில் அவரது முதல் சதம் இதுவாகும். குஜராத் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

 

அதிகபட்சமாக ரஷித் கான் 79 ரன்களை குவித்தார். மும்பை அணி சார்பில் ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்களையும் பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். நடப்பு சீசனில் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பியூஷ் சாவ்லா 17 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஜடேஜா 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் குஜராத் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரஷித் கான் இன்று மட்டும் 10 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். 

 

இன்றைய போட்டியில் ரஷித் கானுக்கு கை கொடுக்க ஒரு வீரர் இருந்திருந்தால் கட்டாயம் குஜராத் வெற்றி பெற்றிருக்கும் என்பது நிதர்சனம். தனியாக போராடி ஆட்டத்தை பரபரப்பாக்கிய ரஷித், கை கொடுக்க இணை இருந்திருந்தால் ஆட்டத்தை குஜராத் அணிக்கு சாதகமாக முடித்து வைத்திருப்பார்.