ADVERTISEMENT

செப்டெம்பரில் ஐபிஎல்? - சென்னைக்கு பின்னடைவு!

01:54 PM May 11, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹா, டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனா உறுதியானது. மேலும், சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும் கரோனா உறுதியானது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடருக்கும், அக்டோபரில் நடைபெறவுள்ள இருபது ஓவர் போட்டிகளுக்கும் இடையே மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயன்று வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கினால், இங்கிலாந்து வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும். குறிப்பிட்ட காலகட்டத்தில் இங்கிலாந்து அணி, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநரும் இதனை மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "இங்கிலாந்து வீரர்கள், இங்கிலாந்து போட்டிகளில் ஈடுபடுவது குறித்து நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் தொடருக்கு அவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்காவிட்டால், அது சென்னை சூப்பர்கிங்ஸ் போன்ற அணிகளுக்குப் பின்னடைவாக அமையும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மொயின் அலி, சாம் கரன் ஆகியோர் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராஜஸ்தான் அணியில் பட்லர், ஹைதராபாத் அணியில் பாரிஸ்டோ என பல இங்கிலாந்து வீரர்கள், தங்கள் ஐபிஎல் அணிகளில் முக்கியப் பங்கு வகித்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT