Skip to main content

ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா கொல்கத்தா? - ஐ.பி.எல். போட்டி #54

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

ஐ.பி.எல். சீசன் 11 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் ப்ளே ஆஃப் தகுதிச்சுற்றில் தகுதிபெறுவதற்காக ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தகுதி பெறுவதற்காக சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியுடன் அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. 

 

kkr

 

புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி - 0.091 ரன்ரேட்டுடன் ஆபத்தான நிலையில் இருக்கிறது. ப்ளே ஆஃப் தகுதிக்காக ஓட்டம் பிடித்திருக்கும் மற்ற அணிகளுக்கு, கொல்கத்தாவின் தோல்வி எளிமையான வாய்ப்பைத் தந்துவிடும். எனவே, இன்றைய போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி இருக்கிறது. 

 

இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் சன்ரைசரஸ் ஐதராபாத் அணி, கடைசியாக களமிறங்கிய இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதேபோல், கொல்கத்தா அணி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. ஸ்பின்னர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில், அனுபவமும், திறமையும் வாய்ந்த ஸ்பின்னர்களைக் களமிறக்க இந்த இரு அணிகளும் தயாராக உள்ளன. வெற்றி யார்பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

 


 

Next Story

தங்கராசு நடராஜனை தங்கத்தால் ஜொலிக்க வைத்த சன் ரைசர்ஸ்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 Sunrisers made Thangarasu Natarajan shine with gold!

தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு சன் ரைசர்ஸ் அணியால் 80 சவரன் தங்க சங்கிலியுடன் கூடிய மெடல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 
 
ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே கடந்த 20 ஏப்ரல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் 65 அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னாள் வீரர் புவனேஷ்வர் குமார் உட்பட மூத்த வீரர்கள் பலரும் அவரது பந்து வீச்சைப் பாராட்டினர்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைப் பாராட்டி அந்த அணியின் வீரர்கள் கவுரவிக்கப்படுவதும், அதை வீடியோ எடுத்து அணிகள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதும் தற்போது டிரெண்டாகி வருகிறது. மற்ற அணிகள் சிறிய அளவிலான தங்க பேட்சுகள் மற்றும் இதர பரிசுகளை வழங்கி வருகிறது. ஆனால், சன் ரைசர்ஸ் அணி ஒருபடி மேலே போய் ஒரு பெரிய தங்க சங்கிலியையே பரிசாக நடராஜனுக்கு வழங்கி கவுரவம் செய்துள்ளது. 80 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை நடராஜனுக்கு அணிவித்து, அவர் அந்த சங்கிலியுடன் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.