Skip to main content

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி; தொடரை கைப்பற்றிய இந்திய அணிகள்...

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

 

gfffffbnfg

 

இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணிகளும் மோதிவருகின்றன. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றது மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய ஆடவர் அணி 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இரு நாட்டு மகளிர் அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற ஒருநாள்போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 45 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 162 ரன்கள் வெற்றி இலக்கு என்ற நிலையில் தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 15 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதனையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மந்தனாவும் கேப்டன் மிதாலி ராஜும் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். 35 ஓவர்களில் 166 ரன்களை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஸ்மிரிதி மந்தனா 90 ரன்களும், இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் 63 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 

 


 

Next Story

மகளிர் உலகக் கோப்பை; ஸ்மிருதி மந்தனா ரூல்ட் அவுட்!

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Women's World Cup; Smriti Mandhana RULED OUT!!

 

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா உலகக் கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.

 

8 ஆவது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. பிப்ரவரி 26 வரை நடக்கும் இந்தப் போட்டியில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன. பிரிவு ‘ஏ’ வில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் என ஐந்து அணிகளும் பிரிவு ‘பி’ யில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து என ஐந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். 

 

இந்நிலையில் இன்று பார்ல் நகரில் இரண்டு லீக் போட்டிகள் நடக்க உள்ளது. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளன. இரவு 10.30 மணியளவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்து அணிகளும் மோத உள்ளன. நாளை நடக்கும் போட்டியில் இந்தியா தன் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. பயிற்சி ஆட்டத்தின் போது இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா காயத்திலிருந்து இன்னும் மீளாத காரணத்தினால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. 

 

ஸ்மிருதி மந்தனா வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மந்தனா டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2021 டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். 5 ஆட்டங்களில் 235 ரன்களை குவித்தார்.

 

அதேபோல் 2022 டி20 உலகக் கோப்பையிலும் மந்தனா சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அந்த தொடரில் 6 இன்னிங்ஸ்கள் ஆடி 38 ரன்கள் சராசரி உடனும் 144 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடி 228 ரன்களை எடுத்தார். விரைவாக ரன்களை அடிக்கும் திறமையால், மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு தொடக்கம் மற்றும் மிடில் ஓவர்களில் இந்திய அணியின் மிகப் பெரிய பலமாக இருந்தார். எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மந்தனா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்.

 

 

Next Story

விராட்டின் சாதனைப் பட்டியலில் இணைந்த கில்; மூன்றாவது டி20யில் இந்தியா வெற்றி

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

Gill joins Virat's record list; India win third T20I vs newzealand

 

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

 

இந்நிலையில், இன்று அஹமதாபாத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேற ராகுல் திரிப்பாதியுடன் சுப்மன் கில் இணைந்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் நியூசிலாந்து பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். மறுபுறத்தில் திரிப்பாதியும் அடித்து ஆட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

 

திரிப்பாதி 44 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா முறையே 24 மற்றும் 30 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய கில் அசத்தலாக சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கில் 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார்.

 

235 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற மிட்செல் மட்டும் பொறுமையாக ஆடி 35 ரன்களை எடுத்தார். பின் வரிசையில் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்தது. 

 

சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையை படைத்தது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு டப்லினில் நடந்த ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சாதனையாக இருந்தது.

 

எதிரணியின் மொத்த ரன்களை விட தனிநபர் அதிக ரன்களை அடித்ததில் விராட்டின் சாதனைப் பட்டியலில் கில்லும் இணைந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி 111 ரன்களுக்கு சுருட்டியது. அதில் விராட் மட்டும் 122 ரன்களை எடுத்திருந்தார். அதே போல் இன்றைய போட்டியில் நியூசிலாந்து 66 க்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் கில் 126 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். 

 

இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக சதம் அடித்த சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். தொடர்நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.